Saturday, April 3, 2010

குதிரை

படுக்கைக்குப் போகுமுன் எவ்வளவுதான் “ஒன்றுக்குப்” போய்விட்டுப் படுத்தாலும், வழக்கமாக நடுச் சாமம் 12 மணிக்கும் ஒரு மணிக்குமிடையில் கண் விழித்து மீண்டும் ஒருதடவை போய்விட்டுப் படுத்தால்தான் நடராசா மாஸ்டருக்கு நிம்மதியாக நித்திரை வருகிறது. இந்தப் பாழாய்ப் போன சலரோக வியாதி வந்ததிலிருந்து அவருக்கு இதுவே வழக்கமாகிவிட்டது. அன்றைக்கும் அப்பிடித்தான். நடுச்சாமம். அடிவயிறுக்குக் கீழே, புரண்டுபடுக்க முடியாதபடி முட்டிக்கொண்டு நிற்க, “சரி வெளியில பொயிற்று வருவம்” என்று எழும்பத்தொடங்கும்போதே தூரத்திலிருந்து அந்தச் சத்தம் கேட்டது. எழும்பியவர் கட்டிலில் அப்படியே இருந்து சத்தத்தை உன்னிப்பாகக் கேட்டார்.
“டொக் டொக் டொக் டொக்”
குதிரையின் குழம்புச் சத்தம்!.
“இதெங்கால இந்த ஊரிலை குதிரை?” நினைத்துக் கொண்ட மாஸ்டருக்கு வெளியில் போவதா இல்லையா என்று முடிவெடுக்க முடியாதபடி பயம் பிடித்துக் கொண்டது. கொஞ்ச நேரம் அப்படியே கட்டிலில் உட்கார்ந்தபடியே இருந்தார். தேய்ந்துபோன குதிரைக் குழம்பொலி சர்று நேரத்தால் திரும்பவும் நெருங்கி வருவதைக் கேட்டவர் பயத்தில் உறைந்து போய் மனைவியை எழுப்பத் தீர்மானித்தார்.
“இஞ்ச அப்பா.அதென்ன சத்தம்?”
திடீரென வந்த மனைவியின் குரலால் மேலும் பயந்துபோன மாஸ்டர், தான் எழுப்பும் முன்னரே மனைவி எழுந்துவிட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார்.
“குதிரை ஒடுற சத்தம்”
“குதிரையா? இஞ்ச எங்கால குதிர வந்தது?”
“எனக்குந்தெரியேல்லை. ஆனால் இது குதிரைதான். வெளியால போய்ப் பாப்பமா?”
“உங்களுக்கென்ன பைத்தியமா? நடுச்சாமத்தில ரோட்டாலை குதிர ஓடுது. நீங்க வெளியில போறதெண்டு நிக்கிரியள். சும்மா படுங்க. விடிஞ்சால் தெரியவரும்”
“இல்லப்பா. ஒண்டுக்கும் போகவேனும்”
“உங்களுக்கும் கண்டறியாத நேரத்திலைதான் எல்லாம் வரும். கொஞ்சம் பொறுங்க. பாத்திட்டுப் போகலாம்”
ஏற்கனவே முட்டிக் கொண்டு இருந்தது, குதிரைச் சத்தம் தந்த பயத்தில் இன்னும் அதிக அவஸ்த்தையைத் தந்தது. அவரது பகுத்தறிவுக்கும் தட்டுப்படாத அந்தக் குதிரைச் சத்தம் மண்டையை ஒருபுறம் குடைய, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே கட்டிலில் இருந்துவிட்டார்.
ஒரு கால்மணிநேரம் கழித்து குதிரைக் குளம்புச் சத்தம் தந்த பீதி கொஞ்சம் அடங்க மீண்டும் மனைவியைக் கேட்டார்.
“வெளியால போயிட்டு வருவமா?”
“தம்பி மூத்தவனையும் எழுப்புங்க. எல்லாருமாப் போயிட்டு வருவம்”
நடுச்சாமத்தில் தன்னை ஏன் தட்டி எழுப்புகிறார்கள் என்று தெரியாமல் மூத்தவன் என அழைக்கப்பட்ட முகுந்தன் திடுக்கிட்டு எழுந்திருந்து முழுசினான்.
“தம்பி எழும்பு. ஒண்டுக்குக்குப் போறதெண்டால் அப்பாவோட வெளியில போயிட்டு வா”
“எனக்கு வரேல்ல”
“பறவால்ல. போயிட்டு வந்து படு”
ஒருநாளுமில்லாமல் ஏன் தன்னை நடுச்சாமத்தில் வலுக்கட்டாயமாக ஒண்டுக்குப் போகச் சொல்லுகிறார்கள் எனத் தெரியாமல் தூக்கக் கலக்கத்துடன் எழுந்தான். குடும்பமே வெளியில் போய் வந்தது. மாஸ்டருக்கு அப்போதும் ‘குதிரை திரும்பவும் வந்துவிடுமோ’ என உள்ளூரப் பயந்தான்.

---000---
விடிந்தும் விடியாதுமாக ஊரே அல்லோலகல்லோலப்பட்டது. எத்தனையோ விதமான ஒலிகளை அந்த ஊர் இதற்கு முன்னர் கேட்டிருந்தாலும், நேற்றுக்கேட்ட அந்தக் குதிரைக் குளம்பொலி எல்லோரையும் பயத்திலும் வியப்பிலும் ஆழ்த்திவிட்டிருந்தது. மட்டக்களப்பில் அப்போதைய ‘றீகல்’ படமாளிகைக்கு முன்னால், புல்வெளியில் புல் மேய்ந்து கொண்டிருக்கும் இரண்டு மூன்று மட்டக் குதிரைகளைத் தவிர அந்தச் சுற்று வட்டாரத்தில் வேறு எங்குமே குதிரைகளை அந்த ஊர் மக்கள் கண்டதாகச் சரித்திரமில்லை. அந்த மட்டக் குதிரைகள் தெற்கு நோக்கி 22 மைல் தொலைவு பயணம் வந்திருப்பதற்கான சாத்தியங்களும் இல்லை. அப்படித் தப்பித் தவறி வழிமாறி வந்திருந்தாலும் அவை குளம்பு பூட்டியிருக்கவில்லை. குளம்பு பூட்டினாலும் மட்டக்குதிரைகள் அவ்வளவு வேகமாக ஓடுமா என்பதும் சந்தேகமே.

கடவுளரின் மீதே அனைத்துப் பாரத்தையும் போடும் வயதான சிலர், அது சாமிதான் வந்ததெனச் சாதித்தார்கள். ஆனால் சில முற்போக்குக் கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர்கள், “குதிரை ஏறிவரக் கூடிய எந்தவொரு சாமியும் இந்த ஊரில இல்ல. அது வேறு சத்தம். மாடு வெருண்டு ஒடியிருக்கும்” என்று நக்கலாகச் சொல்லிச் சிரித்தனர். பகுத்தறிவுக் கொள்கையில் ஊறிப்போன நடராசா மாஸ்டருக்கும் வந்தது குதிரையா இல்லை மாடா என்பதை விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் முதல் நாள் ராத்திரி. ஒரு தடவையல்ல. இருதடவை அவரும் அந்தச் சத்தத்தைக் கேட்டிருந்தார்.

முதலில் முதலாம் குறிச்சிப்பக்கமிருந்து இரண்டாம் குறிச்சிப்பக்கமாக ஓடிக்கேட்டது. பிறகு இரண்டாம் குறிச்சிப் பக்கமிருந்து முதலாம் குறிச்சிப்பக்கம் ஓடிக் கேட்டது. ஆனால் அனைவரும் மாஸ்டர் சொன்னதைப் போலவே இரண்டு தடவைகள் குதிரை ஓடிய சத்தத்தைக் கேட்டிருந்தனர்.

பகலானதும் குழப்பம் அதிகரிக்க அதிகரிக்க கோவிலடி அரசமரத்தின் கீழ் பெரிய கூட்டம் கூடத் தொடங்கியது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருக்க, பேச்சியம்மன் கோவில் பூசாரியார் பொன்னர் மட்டும் கொடுப்புக்குள் ஒரு புன்னகையுடன் தொண்டையைச் செருமி எச்சிலைத் துப்பிவிட்டுச் சொன்னார்,
“அடேய். இது ஆச்சி அம்மாளிட வேலைடா. ஊருக்குள்ள கொள்ளையும் களவும் விபச்சாரமும் மலிஞ்சு போனா இப்பிடித்தான். அவள் பாத்துத்து இரிக்கமாட்டாள். காவலுக்கு வந்துத்தாள். அவள் வாற நேரத்தில ஆரும் எதிரில வந்து அம்பிட்டீங்களோ…. கதை அரோகராதான்” என்றார்.

அப்போதுதான் மருந்துப் போத்திலோடு கோவிலடியைக் கடந்து போய்க் கொண்டிருந்த கள்ளத் தம்பிராசா, நின்று தலையைத் தூக்கிப் பூசாரியாரை ஒரு தரம் முறைத்துப்பார்த்துவிட்டு வேகமாக நடந்து போனான். ஊரிலுள்ள தோட்டங்களில் மரக்கறிவகைகளும் மரவள்ளிக் கிழங்கும் களவெடுப்பதில் புகழ்பெற்றவன் கள்ளத் தம்பிராசா, என்றாலும் அவனது முகத்திலும் பயத்தின் ரேகைகள். நேற்றிரவு அவன் கந்தையரின் தோட்டத்து மரவள்ளிக் கிழங்குகளுக்குக் குறிவைத்திருந்தான். நடுச்சாமம் கோணிப் பையுடன் பாதி வழியில் போய்க் கொண்டிருந்தபோதுதான் பாழாய்ப் போன இந்தக் குதிரைச் சத்தம் கேட்டது. “ஐயோ” என்று பயந்து நடுங்கி ஓடி வந்து பாயில் படுத்தவன்தான். விடிந்தபோது குலை நடுக்கத்தோடு காய்ச்சலும் பிடித்துக் கொண்டது. ஊர் ஆஸ்பத்திரியில் அப்போதிக்கரி ஐயாவிடம் காட்டி மருந்தெடுத்துத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் பூசரியார் பொன்னர் அம்மனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அம்மன் காவலுக்கு குதிரையில் வெளிக்கிட்டால் இனி நம்மட கதி அதோ கதிதானா?”
ஒரு கணம் மனது துணுக்குற்றாலும்
“படைச்ச அம்மாள் படியளப்பாதானே”
என மனதுக்குள் எண்ணியவாறு கள்ளத் தம்பிராசா கடந்து போனான்.

மதியமாகியும் எவருக்கும் எதுவுமே தெரியவரவில்லை. மனக்கணக்குப் போட்டுப் பார்த்த பூசாரி பொன்னர்,
“எதுக்கும் ஒருதரம் ஊர் காவல் பண்ணவேணும்” என்றார். அவரின் பரிவாரங்களும் அதற்கு “ஆமாம்” போட்டனர். ஊரில் காசு தெண்டி அடுத்த வெள்ளிக்கிழமையே ஊர் காவல் சடங்கு செய்வதெனத் தீர்மானித்து, கூட்டம் கலைந்து போனது. வழக்கமாக பகுத்தறிவோடு காரிய காரணன்களோடு விஷயங்களுக்கு விளக்கமளிக்கும் நடராசா மாஸ்டர் அன்றைக்கென்று பார்த்து ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருந்தது அவரது சீடப் பிள்ளைகளுக்குப் புதிராகவே இருந்தது.

--000--


யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தார் நடராசா மாஸ்டர். மூத்தவன் முகுந்தனும் சின்னவனும் கையில் சில பொருட்களோடு மும்முரமாய் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள்.
“ரெண்டு பேருமாய்ச் சேந்து என்ன செய்யிறியள்?”
“இல்லப்பா.புதுசா வந்த ‘ஸ்போட்ஸ் சேர்’ புது ரேஸ் ஒண்டு சொல்லிக் குடுக்கப் போறாராம். அதுக்குத்தான் ஒரு சாமான் செய்யுறன்” முகுந்தன்சொன்னான்
“ ஆ. புது றேஸ் ஓடப்போறியளோ? சரி சரி. சாப்பிட்டீங்களா?”
“நீங்களும் வந்தாப் பிறகுதான் சாப்பிடுவன் எண்டிட்டு இரிக்கானுகள்” என்றாள் மாஸ்டரின் மனைவி.
எல்லோரும் சேர்ந்து சாப்பிட்ட பின்னர் மாஸ்டர் கொஞ்சம் கண்ணயர, முகுந்தன் புது ஸ்போட்ஸ் சேரைப் பார்க்கப் போய்விட்டான்.
--00--
“டொக் டொக் டொக் டொக்”
நித்திரைக் கண்ணில் மீண்டும் கேட்டது குதிரைக் குளம்பொலி. மாஸ்டர் திடுக்கிட்டுக் கண்விழித்தார். அதுவும் இந்தப் பகலில் இப்போது கேட்ட குதிரைக் குளம்பொலி றோட்டிலிருந்தல்ல. நடு வீட்டினுள் அதுவும் ஹோலிலிருந்து வந்தது. படாரென எழுந்து ஹோலுக்குள் விரைந்தார் மாஸ்டர்.

கண்ணுள்ள இரண்டு சிரட்டைகளின் கண்ணுக்குள் ஓட்டை போட்டு அதனூடாக நீளமான கயிற்றைப் போட்டு முடிச்சுக் கட்டிக் கொண்டு கால் விரல்களிடையே கயிற்றை நுழைத்தபடி கயிற்றின் நுனியைக் கையில் பிடித்துக்கொண்டும் கட்டிய சிரட்டையின்மேல் நின்றுகொண்டும் மூத்தவனும், சின்னவனும் நடை பயின்று கொண்டிருந்தனர்.
“டொக் டொக் டொக் டொக்”
அதே குதிரைக் குளம்புச் சத்தம்.
“இதென்னடா புது விளையாட்டு.?”
“புது ‘ஸ்போட்ஸ் சேர்’ சொல்லித்தந்த குதிரையோட்டம். தம்பிக்கும் ஒண்டு செய்து குடுத்தனான். கிரௌண்டிலை ஒடக்குள்ள பெரிய சத்தமில்லப்பா. இஞ்ச வீட்டுக்குள்ள போட்டு நடந்தாலே சரியா குதிரை ஓடுற சத்தமப்பா.”
மாஸ்டருக்கு ஏதோ புரிந்ததும் புரியாதமாதிரியுமிருந்தது.
“சரி சரி. வீட்டுக்குள்ள விளையாடாமல் வெளியில போய் விளையாடுங்க”
யாரோ அறிவாளி தன் கைவரிசையைக் காட்டியிருப்பானோ? இல்லாவிட்டால் பூசாரியார் சொன்னதுபோல உண்மையில் பேச்சியம்மன்தானோ?
“அப்பா! உங்களுக்குத் தெரியுமோ? காந்தி மாமாவும் இதப்போல ஒண்டு செய்து வைச்சிருக்கிறார். மாங்காய் ஆய அவரிட வீட்ட போன நேரம் கோடிப்பக்கத்தில கிடந்ததைக் கண்டனான். அவரெண்டால் சிரட்டைய நல்லா சீவி, தும்பெல்லம் கழட்டி பள பளவெண்டு வச்சிருக்கிறார்.” சின்னவன் யோகன் சொன்னபோது மாஸ்டரின் பகுத்தறிவு மண்டைக்குச் சற்றே உறைத்தது. காந்தியைக் கண்டால் எல்லாம் விளங்கும்

அவசர அவசரமாக தேனீர் குடித்து, முகத்தைக் கழுவி வெளிக்கிட்டுக்கொண்டு காந்தியைத் தேடிப் புறப்பட்டார் மாஸ்டர். அநேகமாக அவனை அவனது வீட்டில் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடுதான் அவர் கிளம்பினார். பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்து வீடு காந்தியுடையது. கேற்றடியில் நின்று றோட்டைப் புதினம் பார்த்துக் கொண்டிருந்த காந்தி, மாஸ்டரைக் கண்டதும், மடித்துக் கட்டியிருந்த சாரத்தை அவிழ்த்துவிட்டு , மரியாதையாகச் சிரித்தான்.
“என்ன காந்தி றோட்டிலை? வீட்டிலை ஆரும் இல்லையோ?”
“இல்ல ஐயா. அம்ம கூப்பன்கடைக்குப் போயிருக்காவு. பெத்தாச்சி அங்கால கலாக்காட வீட்டுப்பக்கம் போயிற்றாவு”
“உன்னோட கொஞ்சம் கதைக்கோனும். வாவன் வளவுக்க போவம்”
கடப்பைத் திறந்துகொண்டு வளவுக்குள் போனதும் மாஸ்டர் கேட்டார்
“எங்காலடாப்பா நேற்று அந்தக் குதிரையப் புடிச்சனீ?”
காந்தி துணுக்குற்றதை அவனது முகம் காட்டிக் கொடுத்தது. அவன் சமாளித்துக் கொண்டே,
“எந்தக் குதிரை ஐயா?” என்றான்.
மாஸ்டரும் விடுவதாக இல்லை.
“இல்ல கோடிக்குள்ள நீ ஒளிச்சு வைச்சிருக்கிற ‘சிரட்டைக்’குதிர?”
தடலென்று காலடியில் விழுந்தான் காந்தி.
“ஐயா. உங்களுக்கெப்பிடித் தெரியும்?”
காந்தியின் தோளைப் பிடித்துத் தூக்கிவிட்டார் மாஸ்டர் .
“உனக்கு மட்டும்தான் மூளையிருக்கெண்டு நினைச்சனியா? ஏன் இந்த வேலை செய்தனீ?ஊரிலை உன்னாலை எவ்வளவு குழப்பமெண்டு தெரியுமா உனக்கு?”
காந்தி கொஞ்ச நேரம் யோசித்தான்.
“ஊருக்குள்ள களவு கூடிப்போச்சையா. அதுவும் தோட்டக்காரரிட பயிர் பச்சையெல்லாத்தையும் கள்ளர் கூட்டம் களவெடுத்துப் போடுதாம். அதோட வேற வேற கெட்ட வேலைகளும் நடக்குதாமையா. இப்பிடி சாமி பேரைச் சொல்லி ஏதும் செய்தால்தான் பயப்பிடுவாணுகள். நேத்துப் பாருங்கையா ஒரு தோட்டத்திலையிருந்தும் ஒரு பிஞ்செண்டாலும் களவு போகல்லையாம். வேற வழி தெரியாமல் இப்பிடிச் செய்து போட்டன். வெளியில சொல்லிப் போடாதீங்க ஐயா”
ஒரு காலத்தில் தன்னிடம் படித்த அவனிடம், மாஸ்டர் அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை . நடராசா மாஸ்டர் வீடு நோக்கித் திரும்பி நடந்தார்.

--00 --

அடுத்தநாளே ஊர்காவல் சடங்குக்கென பூசாரியார் பொன்னரின் ஆட்கள் வீடு வீடாக காசு தெண்டி வந்தபோது எல்லோரையும் விட அதிக தொகையை பகுத்தறிவுக் கொள்கைப்பிடிப்புள்ள நடராசா மாஸ்டர் ஏன் கொடுத்தாரென்று மாஸ்டரின் மனைவியும் அவரின் சீடப்பிள்ளைகளும் இன்றுவரை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
(முற்றும்)