Thursday, December 2, 2010

முகத்தார் எஸ் ஜேசுரத்தினம் -சில நினைவுப் பதிவுகள்


கடந்த ஞாயிறு காலை 6 மணியிருக்கும். தொலைபேசி அழைப்பொன்று நித்திரையிலிருந்து என்னை எழுப்புகிறது.

மறுமுனையில் "அண்ணை. செய்தி தெரியுமா?" என்கிறது ஆர்.யோகராஜனின் குரல்.

"என்ன செய்தி?" என்கிறேன்.

"முகத்தாரெல்லே மோசம் போய்ட்டாராம்" இது யோகராஜன்.

அதிர்ச்சியில் உறைந்த என்னை "அண்ணை அவரைப்பற்றி ரேடியோவில் ஒரு நினைவுப் பகிர்வு செய்ய வேண்டும். செய்யிறீங்களா?" என்கிறான் தம்பி யோகராஜன்.

"ஓம் செய்வோமே" என்கிறேன்.

என் நினைவுகள் பின்நோக்கிப் பறக்கின்றன.

000000

79 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தரமாக நான் இணைந்து கொண்டாலும் 76 ஆம் ஆண்டிலிருந்து வானொலிக் கலைஞனாகக் குரல் தேர்ச்சி பெற்று வானொலி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்தேன்.

வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் செல்லும் போதெல்லாம் முறுக்கிய மீசை, மிடுக்கான நடை , கம்பீரமான குரல் என்பவற்றோடு ஒரு ஆஜானுபாகுவான மனிதர் தமிழ் நாடக நிகழ்ச்சிகளிலே கலந்துகொள்ள வருவதைக் கண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் அவர் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருக்கவேண்டுமென நான் நினைத்திருந்தேன்.

அப்போது வானொலியில் நாடகத் தயாரிப்பாளராக விளங்கிய கே எம் வாசகரின் தயாரிப்பில் ஒலிபரப்பான நாடகங்களிலும், கதம்பம் என்ற பெயரில் ஒலிபரப்பான நகைச்சுவை நாடக நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் அவர் எஸ். ஜேசுரத்தினம் என்பதைப் பின்னர்தான் அறிந்துகொண்டேன். அவ்வப்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் 'மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்ட்' என்று அழைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் திணைக்களத்தில் கணக்குப் பிரிவிலே நல்லதொரு பதவியில் இருந்தார் என்று பின்நாட்களில் அறிந்துகொண்டேன் .

கலகலவென கள்ளமில்லாமல் சத்தமிட்டுச் சிரிப்பதுடன் எப்போதுமே புன்முறுவல் பூத்தவராக உற்சாகமாகவே காணப்பட்ட ஜேசு எல்லோரையும் போல என்னையும் கவர்ந்ததில் வியப்பில்லைத்தான்.

அந்தக் காலத்தில்தான் அமரர் சில்லையூராரின் திரைப்படப் பிரதியான 'தணியாத தாகம்' அமரர் கே எம் வாசகரின் கைவண்ணத்தில் வானொலி நாடகமாக உருப்பெற்றது. இந்த நாடகத்தின் ராஜன் என்ற பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த நாடகத்தில் ஒரு மலேஷியன் பென்ஷனியராக நடித்தவர் எஸ்.யேசுரத்தினம்.

ஓர் உயர் மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பாத்திரத்தைத் தனது நடிப்பின் மூலம் அவர் உயிர்ப்புடன் வெளிக்கொண்டு வந்தார் என்று சொல்லவேண்டும். ஆங்கிலச் சொற்களை அற்புதமாக உச்சரிப்பதுடன் யாழ்ப்பாண மேற்தட்டு வர்க்கத்தினரில் உடல் மொழியைத் தனது குரலினாலே வெளிக்கொண்டு வந்தார் ஜேசுரத்தினம். இந்தக் காலந்தான் ஜேசுரத்தினத்தை ஜேசு என்று அழைக்கும் நெருக்கத்தை ஈட்டித்தந்தது.

ஒவ்வொரு நாடக ஒலிப்பதிவின் பின்னரும் 'டேய் எப்பிடிடா இருந்தது?" என்று சின்னப் பிள்ளைகள் போன்று கேட்பார். "நல்லாயிருந்தது ஜேசு" என்றால், தன் முறுக்கு மீசையைப் புறங்கையால் தடவியபடியே புன்முறுவல் பூப்பார்.

நாடக ஒலிப்பதிவுகளின் பின்னர் வானொலி நிலையத்திற்கு வெளியே நடக்கும் 'தாக சாந்தி' களின்போது நான் பார்வையாளனாக இருந்து ஜேசுவின் நகைச்சுவைக் கதைகளைக் கேட்டுச் சிரித்து மகிழ்வதுண்டு.

‘தணியாத தாகம்’ நாடகம் மேடைக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம் உட்பட 3 மேடைகளில் அரங்காற்றுகையானபோது ஜேசுவுடன் யாழ்ப்பாணம் ரயிலில் பயணித்ததும், அவருடன் மேடையில் தோன்றி நடித்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

இவ்வாறு அவ்வப்போது நிகழ்ந்து வந்த எங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழ்வதற்கு வாய்ப்பொன்று விவசாய ஒலிபரப்புச் சேவையின் உதவியோடு வாய்த்தது.

80 களின் ஆரம்பத்தில் விவசாய ஒலிபரப்புச் சேவையில் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான சி. ஸ்ரீஸ்கந்தராஜா, விவசாயத் தகவல்களை நாடக வடிவத்தில் வழங்கும் எண்ணத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு முன்வைத்தார். இந்த எண்ணக் கருவே, பிரதி வெள்ளிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பான 'முகத்தார் வீட்டில்' என்ற விவசாய நாடகத் தொடருக்கு வழி கோலியது.

15 நிமிடத்துக்குள் ஒரு விவசாயக் குடும்பத்துள் நடக்கும் நகைச்சுவையான சம்பவங்களுடன் விவசாயத் தகவல்களை வழங்குமொரு நிகழ்ச்சியாக 'முகத்தார் வீட்டில்' மாறியது. விவசாயத் தகவல் என்பது எல்லோரையும் கவரும் ஒரு விடயமல்ல. ஆனால் 'முகத்தார் வீட்டில்' நாடக நிகழ்ச்சி, வயது, சமயம், பால் நிலை வித்தியாசங்களின்றி அனைவரையும் கவர்ந்து 5 வருடங்களுக்கும் மேல் ஒலிபரப்பாகிச் சாதனை படைத்ததென்பது எஸ் ஜேசுரத்தினத்தின் எழுத்துக்கும் நடிப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்வேன்

வெறும் களிப்பூட்டலை மட்டுமே மையமாகக் கொண்டு ஒலிபரப்பான வானொலி நாடகங்கள், “முகத்தார் வீட்டில்” என்ற இந்த விவசாய நாடக ஒலிபரப்புடன் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது. 5 ஆண்டு காலத்திற்கும் மேலாக, சரியாகச் சொல்வதானால் (83 இனக்கலவரத்தின் போது மறு ஒலிபரப்புச் செய்யப்பட்ட அங்கங்களுக்குப் புறம்பாக) 268 வாரங்கள் தொடர்ச்சியாக ஒலித்தது முகத்தார் வீட்டில் நாடகம்.

இதில் முகத்தாராக நடித்த ஜேசுவின் மனைவி தெய்வானை (ஏ எம் சீ ஜெயஜோதி) யின் இளைய சகோதரன் சரவணையாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஜேசுரத்தினம், ஏ எம் சீ ஜெயஜோதி, நான் என்ற முக்கூட்டணியுடன் ஒவ்வொரு வாரமும் இன்னுமொரு பாத்திரமும் கலந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருந்த இந்த நாடகத்தில் சரவனையெனும் நான் அடிவாங்காத நாட்களே கிடையாது என்னும் வகையில் நாடகத்தினை நடத்திசெல்வார் ஜேசு.

ஜேசுவையும் என்னையும் நினைத்தால் ஆங்கிலக் கார்ட்டூன் கதைகளில் வரும் 'டொம் அண்ட் ஜெரி' பாத்திரங்களே என் நினைவுக்கு வரும். பெரியத்தார் என்று பாசமாக அழைத்துக்கொண்டே நான் செய்யும் அசட்டுக் காரியங்கள் அவரைச் சிக்கலில் மாட்டும். எனக்குச் சித்திரவதை கிடைக்கும். அக்கா தெய்வானை என் பக்கம்.

இந்த நாடகத்தைக் கேட்ட நாட்டின் சகல பகுதிகளையும் சேர்ந்த வயதான தாய்மார், என்மீது அனுதாபப்பட்டு என் அபிமானிகளாகியதும் இங்கு குறிப்பிடவேண்டியதே.

இந்த நாடக ஆக்கங்களின் போது ஜேசுவின் செய் நேர்த்தியை நான் கண்டு வியந்திருக்கிறேன். நாடகத்தில் வரும் அனைத்துத் தகவல்களும் சரியாக இருக்கவேண்டுமென்பதில் ஜேசு மிகுந்த அக்கறையுடனிருப்பார். ஒருமுறை கலையகத்திற்கு வரும்போது சீன உணவகமொன்றின் உணவுப் பட்டியலை (மெனு கார்ட்டை) அவர் கையோடு எடுத்து வந்திருந்தார். ஏனென்று கேட்டபோது அடுத்த அங்கத்திலே கப்பலில் போன அவர் மகன் சீன உணவகமொன்றுக்குக் போவதாகவும் அவன் கூறிய உணவு வகைகளை அப்படியே காட்சியில் சொல்லவேண்டுமென்பதற்காக, அதை எடுத்துக்கொண்டு வந்ததுடன் அதிலுள்ள பெயர்களை எப்படி உச்சரிப்பதென உணவகத்தாரைக் கேட்டுத் தமிழில் அவற்றை எழுதியும் வந்திருந்தார்.

இவ்வாறுதான் பரியாரியாரின் வாகடமும், பண்டிதரின் இலக்கணமும், சாத்தியாரின் பஞ்சாங்கமும் இல்லாமல் அவர்களைப் பற்றி ஜேசு எழுதமாட்டார்.

மகன் கப்பலில் போனதாக எழுதும்போதெல்லாம் சரியான கடல் வழிகளும், துறைமுகங்களும், நாணயங்களும் அவர் பிரதியில் அப்படியே இருக்கும்.

முகத்தார் வீட்டின் ஒலிபரப்பு வெற்றி காரணமாக 80களின் நடுப்பகுதியில் வன்னியில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மைதானத்திலே முகத்தார் வீட்டில் நாடகத்தை நாங்கள் அரங்கேற்றினோம் என்பதையும் இவ்வேளையில் குறிப்பிடவேண்டும்.

இந்த நாடகத்தின் வெற்றி காரணமாகவே வெறுமனே எஸ் ஜேசுரத்திரமாக இருந்தவர் முகத்தார் ஜேசுரத்தினமாக மாறினார். அவரை முகத்தார் ஜேசுரத்தினம் என அழைப்பதிலே அவருக்கு மகிழ்ச்சியும் பெருமையும் கிடைத்தது.

இதற்கிடையில் இலங்கையில் உருவான 'வாடைக்காற்று' என்ற திரைப்படத்தில் பொன்னுக் கிழவராக அவர் நடித்ததும் அந்தப் பாத்திரப் படைப்புக்காக ஜேசு ஜனாதிபதி விருது வென்றதும் ஞாபகத்தில் வந்து செல்கிறது.

ஜேசுரத்தினம், 1993ல் புலம்பெயர்ந்து ஃப்ரான்ஸ் நாட்டில் அவரது பிள்ளைகளுடன் வசிப்பதற்காகச் சென்றுவிட்டார். அத்துடன் அவருடனான தொடர்பும் அற்றுப்போய் விட்டது. ஆனால் அவர் புலம்பெயர் தேசங்களிலே தயாரிக்கப்பட்ட வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்ததாகச் செய்திகள் மூலம் அறிந்து மகிழ்ந்தோம்.

7 ஆண்டுகளுக்கு முன் ஒலிபரப்புப் பணியொன்றின் நிமித்தம் எனக்கு பிரான்ஸ் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்குக் கிடைத்ததோ 10 நாள் எனும் குறுகிய காலப் பயண வாய்ப்பு. இதில் ஜேசுவைச் சந்திப்பேன் என்பதைக் கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை. அவ்வாறான திட்டமும் என்னிடம் இருக்கவில்லை.

ஆனால் நான் பரீஸ் வந்திருப்பதை எப்படியோ அறிந்த ஜேசு, நான் தங்கியிருந்த முகவரியின் தொலைபேசி இலக்கத்தை அவரது பரீஸ் நகரத் தமிழ் வானொலி நண்பர்கள் மூலம் தேடிப்பிடித்து, அதே கம்பீரமான தொனியில் "எழில் வாடா நாங்கள் 'முகத்தார் வீட்டில்' நாடகப் பிரதிகளை இங்கும் ஒலிப்பதிவு செய்வோம்' என அழைத்தார்.

இரவோடு இரவாக முகத்தார், சரவணை, அப்புக்குட்டி (ராஜகோபால்) ஆகிய பாத்திரங்களை வைத்து அவர் எழுதிய 3 பிரதிகளையும் நாம் அடுத்த நாள் ஒலிப்பதிவு செய்தபோது அவர் முகத்தில் நான்கண்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் இன்றைக்கும் எண்ணிப் பார்க்கிறேன்.

பிரான்ஸில் இருந்து கொண்டே ஜேசுரத்தினம் , 'முகத்தார் வீட்டில்' வானொலி நாடகப் பிரதிகள் ஐந்து, மேடை நாடகங்கள் மூன்று, வேறு வானொலி நாடகப் பிரதிகள் நான்கு என மொத்தம் 12 நாடகங்களை “முகத்தார் வீட்டுப் பொங்கல்” என்ற பெயரில் 1999ல் மணிமேகலைப் பிரசுரமாக வெளியிட்டிருந்தார்.

அந்த நூலின் பிரதியொன்றை அப்போது அன்பளிப்பாகத் தந்த அவர், இன்னுமொரு புத்தகம் போடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அதன் வேலைகளுக்காகத் தமிழ்நாட்டுக்கு வரவிருப்பதாகவும் அப்போது சந்திப்போம் என்றும் சொன்னார்.

ஆனால் அந்தப் பொன்னான நாள் வராமலே போயிற்று.

பரிசிலிருந்து நண்பர் எஸ் கே ராஜன் தொலைபேசியில் அழைத்தபோது சொன்னார், "எப்போது அவருடன் எதைப்பற்றி உரையாடக் கிடைத்தாலும் உங்களுடைய பெயரை அவர் ஒருதடவையேனும் குறிப்பிட மறக்கமாட்டார்" என்றார்.

"நீங்கள் மறக்காமல் இருக்கும் அளவிற்கு நான் என்ன செய்துவிட்டேன் பெரியத்தார்! சென்றுவாருங்கள். உங்கள் நினைவோடு இங்கு நாம் இருப்போம்."

Saturday, April 3, 2010

குதிரை

படுக்கைக்குப் போகுமுன் எவ்வளவுதான் “ஒன்றுக்குப்” போய்விட்டுப் படுத்தாலும், வழக்கமாக நடுச் சாமம் 12 மணிக்கும் ஒரு மணிக்குமிடையில் கண் விழித்து மீண்டும் ஒருதடவை போய்விட்டுப் படுத்தால்தான் நடராசா மாஸ்டருக்கு நிம்மதியாக நித்திரை வருகிறது. இந்தப் பாழாய்ப் போன சலரோக வியாதி வந்ததிலிருந்து அவருக்கு இதுவே வழக்கமாகிவிட்டது. அன்றைக்கும் அப்பிடித்தான். நடுச்சாமம். அடிவயிறுக்குக் கீழே, புரண்டுபடுக்க முடியாதபடி முட்டிக்கொண்டு நிற்க, “சரி வெளியில பொயிற்று வருவம்” என்று எழும்பத்தொடங்கும்போதே தூரத்திலிருந்து அந்தச் சத்தம் கேட்டது. எழும்பியவர் கட்டிலில் அப்படியே இருந்து சத்தத்தை உன்னிப்பாகக் கேட்டார்.
“டொக் டொக் டொக் டொக்”
குதிரையின் குழம்புச் சத்தம்!.
“இதெங்கால இந்த ஊரிலை குதிரை?” நினைத்துக் கொண்ட மாஸ்டருக்கு வெளியில் போவதா இல்லையா என்று முடிவெடுக்க முடியாதபடி பயம் பிடித்துக் கொண்டது. கொஞ்ச நேரம் அப்படியே கட்டிலில் உட்கார்ந்தபடியே இருந்தார். தேய்ந்துபோன குதிரைக் குழம்பொலி சர்று நேரத்தால் திரும்பவும் நெருங்கி வருவதைக் கேட்டவர் பயத்தில் உறைந்து போய் மனைவியை எழுப்பத் தீர்மானித்தார்.
“இஞ்ச அப்பா.அதென்ன சத்தம்?”
திடீரென வந்த மனைவியின் குரலால் மேலும் பயந்துபோன மாஸ்டர், தான் எழுப்பும் முன்னரே மனைவி எழுந்துவிட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார்.
“குதிரை ஒடுற சத்தம்”
“குதிரையா? இஞ்ச எங்கால குதிர வந்தது?”
“எனக்குந்தெரியேல்லை. ஆனால் இது குதிரைதான். வெளியால போய்ப் பாப்பமா?”
“உங்களுக்கென்ன பைத்தியமா? நடுச்சாமத்தில ரோட்டாலை குதிர ஓடுது. நீங்க வெளியில போறதெண்டு நிக்கிரியள். சும்மா படுங்க. விடிஞ்சால் தெரியவரும்”
“இல்லப்பா. ஒண்டுக்கும் போகவேனும்”
“உங்களுக்கும் கண்டறியாத நேரத்திலைதான் எல்லாம் வரும். கொஞ்சம் பொறுங்க. பாத்திட்டுப் போகலாம்”
ஏற்கனவே முட்டிக் கொண்டு இருந்தது, குதிரைச் சத்தம் தந்த பயத்தில் இன்னும் அதிக அவஸ்த்தையைத் தந்தது. அவரது பகுத்தறிவுக்கும் தட்டுப்படாத அந்தக் குதிரைச் சத்தம் மண்டையை ஒருபுறம் குடைய, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே கட்டிலில் இருந்துவிட்டார்.
ஒரு கால்மணிநேரம் கழித்து குதிரைக் குளம்புச் சத்தம் தந்த பீதி கொஞ்சம் அடங்க மீண்டும் மனைவியைக் கேட்டார்.
“வெளியால போயிட்டு வருவமா?”
“தம்பி மூத்தவனையும் எழுப்புங்க. எல்லாருமாப் போயிட்டு வருவம்”
நடுச்சாமத்தில் தன்னை ஏன் தட்டி எழுப்புகிறார்கள் என்று தெரியாமல் மூத்தவன் என அழைக்கப்பட்ட முகுந்தன் திடுக்கிட்டு எழுந்திருந்து முழுசினான்.
“தம்பி எழும்பு. ஒண்டுக்குக்குப் போறதெண்டால் அப்பாவோட வெளியில போயிட்டு வா”
“எனக்கு வரேல்ல”
“பறவால்ல. போயிட்டு வந்து படு”
ஒருநாளுமில்லாமல் ஏன் தன்னை நடுச்சாமத்தில் வலுக்கட்டாயமாக ஒண்டுக்குப் போகச் சொல்லுகிறார்கள் எனத் தெரியாமல் தூக்கக் கலக்கத்துடன் எழுந்தான். குடும்பமே வெளியில் போய் வந்தது. மாஸ்டருக்கு அப்போதும் ‘குதிரை திரும்பவும் வந்துவிடுமோ’ என உள்ளூரப் பயந்தான்.

---000---
விடிந்தும் விடியாதுமாக ஊரே அல்லோலகல்லோலப்பட்டது. எத்தனையோ விதமான ஒலிகளை அந்த ஊர் இதற்கு முன்னர் கேட்டிருந்தாலும், நேற்றுக்கேட்ட அந்தக் குதிரைக் குளம்பொலி எல்லோரையும் பயத்திலும் வியப்பிலும் ஆழ்த்திவிட்டிருந்தது. மட்டக்களப்பில் அப்போதைய ‘றீகல்’ படமாளிகைக்கு முன்னால், புல்வெளியில் புல் மேய்ந்து கொண்டிருக்கும் இரண்டு மூன்று மட்டக் குதிரைகளைத் தவிர அந்தச் சுற்று வட்டாரத்தில் வேறு எங்குமே குதிரைகளை அந்த ஊர் மக்கள் கண்டதாகச் சரித்திரமில்லை. அந்த மட்டக் குதிரைகள் தெற்கு நோக்கி 22 மைல் தொலைவு பயணம் வந்திருப்பதற்கான சாத்தியங்களும் இல்லை. அப்படித் தப்பித் தவறி வழிமாறி வந்திருந்தாலும் அவை குளம்பு பூட்டியிருக்கவில்லை. குளம்பு பூட்டினாலும் மட்டக்குதிரைகள் அவ்வளவு வேகமாக ஓடுமா என்பதும் சந்தேகமே.

கடவுளரின் மீதே அனைத்துப் பாரத்தையும் போடும் வயதான சிலர், அது சாமிதான் வந்ததெனச் சாதித்தார்கள். ஆனால் சில முற்போக்குக் கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர்கள், “குதிரை ஏறிவரக் கூடிய எந்தவொரு சாமியும் இந்த ஊரில இல்ல. அது வேறு சத்தம். மாடு வெருண்டு ஒடியிருக்கும்” என்று நக்கலாகச் சொல்லிச் சிரித்தனர். பகுத்தறிவுக் கொள்கையில் ஊறிப்போன நடராசா மாஸ்டருக்கும் வந்தது குதிரையா இல்லை மாடா என்பதை விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் முதல் நாள் ராத்திரி. ஒரு தடவையல்ல. இருதடவை அவரும் அந்தச் சத்தத்தைக் கேட்டிருந்தார்.

முதலில் முதலாம் குறிச்சிப்பக்கமிருந்து இரண்டாம் குறிச்சிப்பக்கமாக ஓடிக்கேட்டது. பிறகு இரண்டாம் குறிச்சிப் பக்கமிருந்து முதலாம் குறிச்சிப்பக்கம் ஓடிக் கேட்டது. ஆனால் அனைவரும் மாஸ்டர் சொன்னதைப் போலவே இரண்டு தடவைகள் குதிரை ஓடிய சத்தத்தைக் கேட்டிருந்தனர்.

பகலானதும் குழப்பம் அதிகரிக்க அதிகரிக்க கோவிலடி அரசமரத்தின் கீழ் பெரிய கூட்டம் கூடத் தொடங்கியது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருக்க, பேச்சியம்மன் கோவில் பூசாரியார் பொன்னர் மட்டும் கொடுப்புக்குள் ஒரு புன்னகையுடன் தொண்டையைச் செருமி எச்சிலைத் துப்பிவிட்டுச் சொன்னார்,
“அடேய். இது ஆச்சி அம்மாளிட வேலைடா. ஊருக்குள்ள கொள்ளையும் களவும் விபச்சாரமும் மலிஞ்சு போனா இப்பிடித்தான். அவள் பாத்துத்து இரிக்கமாட்டாள். காவலுக்கு வந்துத்தாள். அவள் வாற நேரத்தில ஆரும் எதிரில வந்து அம்பிட்டீங்களோ…. கதை அரோகராதான்” என்றார்.

அப்போதுதான் மருந்துப் போத்திலோடு கோவிலடியைக் கடந்து போய்க் கொண்டிருந்த கள்ளத் தம்பிராசா, நின்று தலையைத் தூக்கிப் பூசாரியாரை ஒரு தரம் முறைத்துப்பார்த்துவிட்டு வேகமாக நடந்து போனான். ஊரிலுள்ள தோட்டங்களில் மரக்கறிவகைகளும் மரவள்ளிக் கிழங்கும் களவெடுப்பதில் புகழ்பெற்றவன் கள்ளத் தம்பிராசா, என்றாலும் அவனது முகத்திலும் பயத்தின் ரேகைகள். நேற்றிரவு அவன் கந்தையரின் தோட்டத்து மரவள்ளிக் கிழங்குகளுக்குக் குறிவைத்திருந்தான். நடுச்சாமம் கோணிப் பையுடன் பாதி வழியில் போய்க் கொண்டிருந்தபோதுதான் பாழாய்ப் போன இந்தக் குதிரைச் சத்தம் கேட்டது. “ஐயோ” என்று பயந்து நடுங்கி ஓடி வந்து பாயில் படுத்தவன்தான். விடிந்தபோது குலை நடுக்கத்தோடு காய்ச்சலும் பிடித்துக் கொண்டது. ஊர் ஆஸ்பத்திரியில் அப்போதிக்கரி ஐயாவிடம் காட்டி மருந்தெடுத்துத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் பூசரியார் பொன்னர் அம்மனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அம்மன் காவலுக்கு குதிரையில் வெளிக்கிட்டால் இனி நம்மட கதி அதோ கதிதானா?”
ஒரு கணம் மனது துணுக்குற்றாலும்
“படைச்ச அம்மாள் படியளப்பாதானே”
என மனதுக்குள் எண்ணியவாறு கள்ளத் தம்பிராசா கடந்து போனான்.

மதியமாகியும் எவருக்கும் எதுவுமே தெரியவரவில்லை. மனக்கணக்குப் போட்டுப் பார்த்த பூசாரி பொன்னர்,
“எதுக்கும் ஒருதரம் ஊர் காவல் பண்ணவேணும்” என்றார். அவரின் பரிவாரங்களும் அதற்கு “ஆமாம்” போட்டனர். ஊரில் காசு தெண்டி அடுத்த வெள்ளிக்கிழமையே ஊர் காவல் சடங்கு செய்வதெனத் தீர்மானித்து, கூட்டம் கலைந்து போனது. வழக்கமாக பகுத்தறிவோடு காரிய காரணன்களோடு விஷயங்களுக்கு விளக்கமளிக்கும் நடராசா மாஸ்டர் அன்றைக்கென்று பார்த்து ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருந்தது அவரது சீடப் பிள்ளைகளுக்குப் புதிராகவே இருந்தது.

--000--


யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தார் நடராசா மாஸ்டர். மூத்தவன் முகுந்தனும் சின்னவனும் கையில் சில பொருட்களோடு மும்முரமாய் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள்.
“ரெண்டு பேருமாய்ச் சேந்து என்ன செய்யிறியள்?”
“இல்லப்பா.புதுசா வந்த ‘ஸ்போட்ஸ் சேர்’ புது ரேஸ் ஒண்டு சொல்லிக் குடுக்கப் போறாராம். அதுக்குத்தான் ஒரு சாமான் செய்யுறன்” முகுந்தன்சொன்னான்
“ ஆ. புது றேஸ் ஓடப்போறியளோ? சரி சரி. சாப்பிட்டீங்களா?”
“நீங்களும் வந்தாப் பிறகுதான் சாப்பிடுவன் எண்டிட்டு இரிக்கானுகள்” என்றாள் மாஸ்டரின் மனைவி.
எல்லோரும் சேர்ந்து சாப்பிட்ட பின்னர் மாஸ்டர் கொஞ்சம் கண்ணயர, முகுந்தன் புது ஸ்போட்ஸ் சேரைப் பார்க்கப் போய்விட்டான்.
--00--
“டொக் டொக் டொக் டொக்”
நித்திரைக் கண்ணில் மீண்டும் கேட்டது குதிரைக் குளம்பொலி. மாஸ்டர் திடுக்கிட்டுக் கண்விழித்தார். அதுவும் இந்தப் பகலில் இப்போது கேட்ட குதிரைக் குளம்பொலி றோட்டிலிருந்தல்ல. நடு வீட்டினுள் அதுவும் ஹோலிலிருந்து வந்தது. படாரென எழுந்து ஹோலுக்குள் விரைந்தார் மாஸ்டர்.

கண்ணுள்ள இரண்டு சிரட்டைகளின் கண்ணுக்குள் ஓட்டை போட்டு அதனூடாக நீளமான கயிற்றைப் போட்டு முடிச்சுக் கட்டிக் கொண்டு கால் விரல்களிடையே கயிற்றை நுழைத்தபடி கயிற்றின் நுனியைக் கையில் பிடித்துக்கொண்டும் கட்டிய சிரட்டையின்மேல் நின்றுகொண்டும் மூத்தவனும், சின்னவனும் நடை பயின்று கொண்டிருந்தனர்.
“டொக் டொக் டொக் டொக்”
அதே குதிரைக் குளம்புச் சத்தம்.
“இதென்னடா புது விளையாட்டு.?”
“புது ‘ஸ்போட்ஸ் சேர்’ சொல்லித்தந்த குதிரையோட்டம். தம்பிக்கும் ஒண்டு செய்து குடுத்தனான். கிரௌண்டிலை ஒடக்குள்ள பெரிய சத்தமில்லப்பா. இஞ்ச வீட்டுக்குள்ள போட்டு நடந்தாலே சரியா குதிரை ஓடுற சத்தமப்பா.”
மாஸ்டருக்கு ஏதோ புரிந்ததும் புரியாதமாதிரியுமிருந்தது.
“சரி சரி. வீட்டுக்குள்ள விளையாடாமல் வெளியில போய் விளையாடுங்க”
யாரோ அறிவாளி தன் கைவரிசையைக் காட்டியிருப்பானோ? இல்லாவிட்டால் பூசாரியார் சொன்னதுபோல உண்மையில் பேச்சியம்மன்தானோ?
“அப்பா! உங்களுக்குத் தெரியுமோ? காந்தி மாமாவும் இதப்போல ஒண்டு செய்து வைச்சிருக்கிறார். மாங்காய் ஆய அவரிட வீட்ட போன நேரம் கோடிப்பக்கத்தில கிடந்ததைக் கண்டனான். அவரெண்டால் சிரட்டைய நல்லா சீவி, தும்பெல்லம் கழட்டி பள பளவெண்டு வச்சிருக்கிறார்.” சின்னவன் யோகன் சொன்னபோது மாஸ்டரின் பகுத்தறிவு மண்டைக்குச் சற்றே உறைத்தது. காந்தியைக் கண்டால் எல்லாம் விளங்கும்

அவசர அவசரமாக தேனீர் குடித்து, முகத்தைக் கழுவி வெளிக்கிட்டுக்கொண்டு காந்தியைத் தேடிப் புறப்பட்டார் மாஸ்டர். அநேகமாக அவனை அவனது வீட்டில் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடுதான் அவர் கிளம்பினார். பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்து வீடு காந்தியுடையது. கேற்றடியில் நின்று றோட்டைப் புதினம் பார்த்துக் கொண்டிருந்த காந்தி, மாஸ்டரைக் கண்டதும், மடித்துக் கட்டியிருந்த சாரத்தை அவிழ்த்துவிட்டு , மரியாதையாகச் சிரித்தான்.
“என்ன காந்தி றோட்டிலை? வீட்டிலை ஆரும் இல்லையோ?”
“இல்ல ஐயா. அம்ம கூப்பன்கடைக்குப் போயிருக்காவு. பெத்தாச்சி அங்கால கலாக்காட வீட்டுப்பக்கம் போயிற்றாவு”
“உன்னோட கொஞ்சம் கதைக்கோனும். வாவன் வளவுக்க போவம்”
கடப்பைத் திறந்துகொண்டு வளவுக்குள் போனதும் மாஸ்டர் கேட்டார்
“எங்காலடாப்பா நேற்று அந்தக் குதிரையப் புடிச்சனீ?”
காந்தி துணுக்குற்றதை அவனது முகம் காட்டிக் கொடுத்தது. அவன் சமாளித்துக் கொண்டே,
“எந்தக் குதிரை ஐயா?” என்றான்.
மாஸ்டரும் விடுவதாக இல்லை.
“இல்ல கோடிக்குள்ள நீ ஒளிச்சு வைச்சிருக்கிற ‘சிரட்டைக்’குதிர?”
தடலென்று காலடியில் விழுந்தான் காந்தி.
“ஐயா. உங்களுக்கெப்பிடித் தெரியும்?”
காந்தியின் தோளைப் பிடித்துத் தூக்கிவிட்டார் மாஸ்டர் .
“உனக்கு மட்டும்தான் மூளையிருக்கெண்டு நினைச்சனியா? ஏன் இந்த வேலை செய்தனீ?ஊரிலை உன்னாலை எவ்வளவு குழப்பமெண்டு தெரியுமா உனக்கு?”
காந்தி கொஞ்ச நேரம் யோசித்தான்.
“ஊருக்குள்ள களவு கூடிப்போச்சையா. அதுவும் தோட்டக்காரரிட பயிர் பச்சையெல்லாத்தையும் கள்ளர் கூட்டம் களவெடுத்துப் போடுதாம். அதோட வேற வேற கெட்ட வேலைகளும் நடக்குதாமையா. இப்பிடி சாமி பேரைச் சொல்லி ஏதும் செய்தால்தான் பயப்பிடுவாணுகள். நேத்துப் பாருங்கையா ஒரு தோட்டத்திலையிருந்தும் ஒரு பிஞ்செண்டாலும் களவு போகல்லையாம். வேற வழி தெரியாமல் இப்பிடிச் செய்து போட்டன். வெளியில சொல்லிப் போடாதீங்க ஐயா”
ஒரு காலத்தில் தன்னிடம் படித்த அவனிடம், மாஸ்டர் அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை . நடராசா மாஸ்டர் வீடு நோக்கித் திரும்பி நடந்தார்.

--00 --

அடுத்தநாளே ஊர்காவல் சடங்குக்கென பூசாரியார் பொன்னரின் ஆட்கள் வீடு வீடாக காசு தெண்டி வந்தபோது எல்லோரையும் விட அதிக தொகையை பகுத்தறிவுக் கொள்கைப்பிடிப்புள்ள நடராசா மாஸ்டர் ஏன் கொடுத்தாரென்று மாஸ்டரின் மனைவியும் அவரின் சீடப்பிள்ளைகளும் இன்றுவரை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
(முற்றும்)

Tuesday, February 9, 2010

வாழ்வே கவிதையாய்


தூறுகின்ற மழைத்துளியின் தூய்மைமிக்க தொண்டாலே துயரம் நீங்க

சேறுவற்றி வெடித்தநிலம் செழுமையுற்று நிதிவிளைக்க செய்வ தொப்ப

நாறுகின்ற குட்டைமன நல்லவர்கள் நகைத்தாலும் நலியேன் நெஞ்சில்

ஊறுகின்ற கவித்துளிகள் ஒவ்வொன்றும் தமிழ்வளர்க்கும் உண்மை உண்மை!


பஞ்சமெனும் கொடுநோயின் பல்லிடுக்கில் பட்டுழன்று பசுமை நீங்கி

கொஞ்சுமொழி மனையாளும் குதலைமொழி மைந்தர்கள் குமுறு ஏங்கி

நெஞ்சுதனில் நெருப்பூற்றி நெடும்பயணம் சென்றீறோ எனத்து டித்தால்

அஞ்சாதீர் துணையாக அழகுதமிழ் கவியுண்டென்(று) ஆற்றிச் செல்வேன்

இயற்கைஎழில் மதுவருந்தி இனிக்குமந்த போதையிலே இறும்பூ தெய்தி

மயக்குதமிழ் மங்கைதரும் மதனசுகம் பெறஅவளை மருவி வையம்

நயக்கஇன்று மறுத்தாலும் நானிறந்த பின்பொருநாள் நன்று போற்றி

வியக்கவண்ணம் நறுங்கவிகள் விதவிதமாய் வடித்தவற்றை விட்டுச்செல்வேன்

நீலாவணன், முருகையன் ஆகிய மூவருள் கிழக்கிலங்கை தந்த கவிஞர் நீலாவணனின் வெளிவராத கவிதைகளில் ஒன்று இது.

32 ஆண்டுகளுக்கு முன்னர் மரணித்துப்போன ஒரு கவிஞன், தன் கவிதைமீதும் கவியாற்றல் மீதும் வைத்திருந்த நம்பிக்கை இவ்வாறுதான் கவிதையாக வெளிப்பட்டது. அந்த நம்பிக்கை எத்துணை உறுதியானது என்பதை, இன்றும் அவரது கவிதைகள் சுவைஞர்களால் தேடி வாசிக்கப்படுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. கவிஞர் நீலா வணன் மரணித்து 30 ஆண்டுகளின் பின்னர் வெளிவந்த ‘ஒத்திகை’ எனும் கவிதைத் தொகுதியின் அச்சிட்ட 1000 பிரதிகளும் ஓராண்டு காலத்துள் விற்றுத் தீர்ந்தன என்பது, எனது இக்கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்றே நம்புகிறேன். கவிஞர் நீலாவணனின் மகனாக அந்நூலை வெளியிட்டவன் என்ற வகையில் அவ்வனுபவத்தை நேரடியாகப் பெற்றவன் நான்.

நீலாவணனின் கவிதைகள் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், வாதங்கள், பிரதிவாதங்கள் என, அவ்வப்போது சஞ்சிகைகள், மாசிகைகள், நாளிதழ்கள் என்பவற்றில் வெளிவந்தவண்ணமிருந்தாலும் நீலாவணன் படைப்புகள் இன்னும் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். இதற்கான முழுப்பொறுப்பையும் நானும் எனது குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ளவேண்டியுள்ளோம். அவரது படைப்புகள் அனைத்தும் ஒருசேர இன்னமும் வாசகனைச் சென்றடையவில்லை. அவற்றை முழுமையானதொரு தொகுப்பாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை நாம் இன்னும் செய்யவில்லை. இந்தக்குறை நிவர்த்தி செய்யப்படும் வரை நீலாவணனின் படைப்புகள் தொடர்பான முழுமையானதொரு தரிசனம் எவருக்குமே கிடைக்காது போய்விடும்.

நீலாவணன் கவிதைகளைச் சுவைப்பவர்கள் அவற்றை ஏனைய கவிஞர்களின் கவிதையோடு ஒப்பு நோக்குவதும், சில காரணிகளை முன் வைத்து ஒருவரது கவிதைகளைவிட மற்றவருடைய கவிதை உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்றோ அல்லது அத்தகைய ஒப்புநோக்குதலின் முடிவாக யாரேனும் ஒருவரே கவிதையின் சிகரம் என்றோ நிறுவ முன்வரும் அபத்தங்களையும் அண்மைக்காலங்களில் காணமுடிந்தது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவனது வாழ்க்கை முறை, சமூகப்பின்னணி, வாழும் பிரதேசம், சூழல், சூழ்நிலை, பொருளாதாரப் பின்னணி என்பவை அவனது படைப்புகளில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என்பதை இத்தகைய விமர்சகர்கள் மறந்துவிடுவது விசனத்துக்குரியதே. நீலாவணன் படைப்புகளைச் சுவைப்பதற்கு முன்னர், நீலாவணனின் இத்தகைய சமூக மற்றும் குடும்பப் பின்னணி பற்றித் தெரிந்திருத்தல் அவசியமென நான் நம்புகிறேன்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், மட்டக்களப்பிலிருந்து 22 மைல் தொலைவில் அமைந்துள்ள பெரிய நீலாவணை என்னும் சிற்றூரே நீலாவணன் பிறந்து, வளர்ந்து, மரணித்த ஊர். ஊர்மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். நீலாவணனின் தந்தையார் சித்த ஆயுள்வேத வைத்தியர். நீலாவணனின் தாய்; வழிப்பாட்டனார் சேவகனாராகவும் (பிஸ்கால்), சட்டம்பியராகவும் தொழில் பார்த்தவர். அவருக்கு சோதிடம், மருத்துவம், மந்திரம் என கைவந்த கலைகள் பல. அதனால் நீலாவணனின் தாயாருக்கும் இலக்கியம் தொடர்பான பரிச்சயமிருந்தது. 3 தம்பிமாரையும், 3 தங்கையரையும் கொண்ட நடுத்தரக் குடும்பத்தின் தலைச்சன் பிள்ளை, நீலாவணன். பயிற்றப்பட்ட ஆசிரியராக பணியாற்றியவர். இளமைக் காலத்தில் திராவிட இயக்கத்தின் தீவிர பக்தனாக இருந்து பின்னர் தமிழரசுக்கட்சி அபிமானியாக மாறியவர். சாதிக்கொடுமைகளை, தீண்டாமையை, சமூக அநீதிகளை, மூடநம்பிக்கைகளை, எதிர்;த்துக்; குரல்கொடுத்ததோடு, இவற்றுக்கெதிரான நடவடிக்கைகளை இயக்க ரீதியாக மேற்கொண்டிருந்தவர். இளமைக்காலத்தில் நாத்தீகப் போக்குடையவராக இருந்தாலும் பிற்காலத்தில் இறை நம்பிக்கை கொண்டவராக மாறியவர். உணவுப்பிரியர். நண்பர்களிடத்தில் அலாதி அன்புகொண்டவர். இலகுவில்; உணர்ச்சிவசப்படுபவர். ஏழைகளிடத்தில் இரக்கமுள்ளவர். காதல் திருமணம் செய்து, 5 பிள்ளைகளின் தந்தையாக, 42 வயதில் மாரடைப்பால் மரணமானவர். இத்தகைய பதிவுகளோடு நீலாவணனின் படைப்புகளைத் தரிசிக்கும்போது அவற்றின் காத்திரத் தன்மையை உணர்ந்துகொள்ளமுடியும்

அனுபவமும் பங்குபற்றலுமே ஒரு படைப்பின் அடிநாதம்; என்பார்கள். நீலாவணன் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பலவற்றை கவிதைகளாக வடித்து விட்டுச் சென்றிருக்கின்றார். அவை பிரசுரிக்க வேண்டியவையா? பிரசுரத்திற்குத் தகுதியானவையா? இல்லையா என்பதை அவர் எங்கும் குறிப்பிட்டுச் செல்லவில்லை. தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை, தான் சந்தித்த நிகழ்வுகளை, மன உளைச்சல்களை கவிதைகளாக வடித்துள்ளார். வெறுமனே கவிஞன் என்ற பெயருக்காக வாழ்ந்துவிட்டுச் செல்லாமல் கவிஞனாகவே கவிதையுடன் அவர் வாழ்ந்து மறைந்துள்ளார். இதுவரை வெளி உலகத்துக்குத் தெரியவராத அத்தகைய கவிதைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நீலாவணன் தமது பிள்ளைகளான எம்மைப்பற்றி அவ்வப்போது எழுதிய கவிதைகள் சில.

என்னை மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய விடுதியில் சேர்த்துவிட்டு, வீPடுசென்ற அன்றிரவு அவர் எழுதிய கவிதை இது. அவரின் மரணத்தின் பின்பே இக்கவிதையை நான் கண்டேன்.

விடுதியில் வேந்தன்..

காந்தம் இழுத்திடும் என்பார்கள் பெற்றோர் தம் பிள்ளையின்மேல்

பாந்தம் இருக்குமென் பேன்நான் கவிஞன்! அறிஞரவர்!

வேந்தன் உனை நான் விடுதியில் விட்டு நம் வீடுவரச்

சாய்ந்து பொழுது மலையுள் சரிந்து சயனித்தது.

வீட்டில் விளக்கு இலை. இருள்! ஏதோ விழுங்கியவள்

ஆட்டம் இருந்தாள் உன் அம்மா. முதுசொமாம் ஆதனத்தைக்

கோட்டை கொடுத்தவள் போல் கூரை மேட்டைக் குறிப்புவைத்து

தேட்டம் நடத்துகின் றாளோ! தெரியேன!; திருகிவிட்டேன்

பாட்டுக்கெழுந்து நடந்து விளக்கினைப் பற்றவைத்தாள்

கேட்டாள் உன் சங்கதி யாவும் குடைந்தவை கூறுகையில்

பாட்டுச் சுரந்தவள் கண்களில் பாய்ந்து பரவும். அதைக்

காட்டாமல் மெல்ல நடந்து தன் காரியம் கைப்பிடித்தாள்.

வீணையின் தந்திகள் கால்பட்டு விண்ணென் றறுந்திடவும்

வீணை அழுத குரல்கள் என் காதில் விழுந்தன@ போய்

பானை அடுக்கை உருட்டி விழியை முந்தானையினால்

நானறியாது துடைத்தனள் உன் வீரத் தாய்! நகையே

என்தம்பி வினோதன் வாய்பேச முடியாதவன். ஒருநாள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவனின் பந்து களவு போன விதத்தை அவர் இவ்வாறு கவிதையில் வடித்திருக்கிறார்.

தாய்

பேசத் தெரியாத, என் பிள்ளை, நெடுநாளாய்

ஆசையோடு வைத்துவிளை யாடும் அழகான

பந்தோ டிருந்தான் படலைக்குள், யாரோ பெண்

குந்தியிருந்தாள் குழந்தை அருகினிலே,

ஆஸ்பத் திரியிருந்து வந்திருந்தாள் அம்மாது

பேசத் தெரியாத பிள்ளையெனக் கண்டறிந்தாள்

ஆசையொடு தன்கழுத்தைக் கட்டி ‘அம்மா பந்து’ என்று

பேசும்பொற் சித்திரத்தைப் பெற்றமனம் எண்ணியது

பந்தொன்று வாங்கப் பணமில்லை ஆதலினால்

சந்தர்ப்பம் தன்னைச் சரியாய்ப் பயன்படுத்திக்

கொண்டாள், அவளுடைய கொங்கைகள் மூன்றாயின!

கண்ட ஒருவர் கதைசொல்லும் முன்பே அத்

தாய்மை நடந்து தலைமறைந்து போயிற்று!

வாய்பேசா என்மைந்தன், தாயோ டிவைசொன்னான்

கண்களில் நீர் சோரக் கை காட்டி அழுகின்றான்

கண்துடைத்தேன், பிள்ளைக்கு.

‘கள்ளி’ என்றாள் என்துனைவி

என் தங்கை படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரியில்லை என்பது அவளது ஆசிரியையின் கருத்து. ஆனால் அவள் கெட்டிக்காரிதான். ஏதோ இப்போது கொஞ்சம் படிப்பில் கவனம் குறைவு என்கிறார். அவள் புத்திசாலி என்பதை அவர் நிறுவும் விதம் இதுதான்.

விவேகி

துக்கமும் துயரும் பொங்கும்

துவிகுரல் சினிமாப் பாட்டு

பக்கத்து வீட்டுப் பையன்

பலமாகப் பாடல் கேட்டேன்

பக்கத்தில் இருந்து பாடம்

படித்தவள் நளினி வாவா

பக்கென நூலை மூடிப்

பார்த்தனள் சுற்றும் முற்றும்

பாட்டிலே சொக்கிப் போய் தன்

படிப்பையும் துறந்தாள் என்று

காட்டினர் வீட்டிலுள்ளோர்!

கணத்திலே, துடைப்பம் தூக்கி

மூட்டைபோல், கிடந்த நாயின்

முதுகிலே போட்டாள் ஒன்று!

வீட்டினைச் சுற்றி நாயும்

வீல் என்று கத்த மீண்டாள்!

ஆதலால்.. நளினி பற்றி

அழகம்மா ரீச்சர், நீங்கள்

வேதனைப் படுதல் வேண்டாம்!

விவேகிஎன் நளினி, ஏதோ

சாதனைக் குறைவு: நாளை

சரிப்பட்டு விடுவாள்.. ஆண்டுச்

சோதனைக் கெல்லாம் நன்றாய்

விடை செய்வாள்! கவலை வேண்டாம்!

என் கடைசித் தங்கை கோசலாவின் கையில் அவளது பொம்மை படும்பாட்டை பாட்டாய் அவர்வடித்த பாங்கு இது.

விதியும் நானும்

நீல மணிக்கண்கள் நீண்ட கரியமுடி

கோல நிலா கட்டிக் கொஞ்ச துடிக்கும் நகை

இளமை ஒழுகும் எழிலோ வியமாய்

அழகாய் கலைஞன் அமைத்தெடுத்தான் ஓர் பாவை!

எம் வீட் டிள வரசி கோசலை என்பவள்

என்னென்ன பாடு இதனைப் படுத்துகிறாள்

தண்ணிரில் போட்டு வைப்பாள் தலையூறி விட்டதென்று

துண்டு கொண்டு வந்து துடைத்தாள் பவுடர்

கொண்டு வந்து மேனியெங்கும் கொட்டித் தடவிவிட்டு

பாவாடை சட்டை முத்து மாலை றிபன் கட்டி

பாவை தன் மார்பினிலே பாலூட்டித் தாலாட்டும் பாடுகிறாள்.

காலில் தலையணையைப் போட்டு வளர்த்தி

தூங்க வைத்து விட்டு துணி கழுவப் போகிறாள்

தேங்காய் துருவினாள் காய்கறிகள் வெட்டி

கறிகளோடு சோறு சமைத்தாள் அவைபின்

பிரியமாய் பிள்ளையினை தூக்கி வைத்து ஊட்டுகிறாள்

தீடீரென்று கோபத்தில் திட்டுகிறாள் பிள்ளையை

படீரென்று நாலுமுதுகில் படைத்துவிட்டு

பள்ளிக்கு போய்படிக்க சொன்னாள் நீ போகாமல்

துள்ளி விளையாடப் பார்க்கிறாள் எண்ணி என்று

பார்க்க பரிதாப மாக இருக்கிறது.

இப்படி பாவை தினமும் பலதடவை

அப்பாவி.. கையில் படும்பாடு கொஞ்சமல்ல

எப்பொழுதும் என்மகள் விளையாடக் கூப்பிட்டால்

தப்பாது பாவையவள் கையில் தடகொடுக்கும்

விதி என்னை விளையாடக் கூப்பிட்ட வேளைகளில்

அதை ஏற்றதன் பின்னே போனதுபோல் பாவையும்

என்மகள் கையில் இருந்து வருகிறது

ஆடி அமாவாசை

இரண்டு நாட்களுக்கு முன் அவன் அந்த வானொலிச் செய்தியைத் தற்செயலாகத்தான் கேட்க நேரிட்டது. நாட்டில் ஐந்தாறு தமிழ் வானொலிகள் இருந்தாலும், இப்போதெல்லாம் அவன் வானொலி பெரிதாகக் கேட்பதேயில்லை. இத்தனைக்கும் அவனுக்கு வானொலி ஒன்றும் எதிரியோ அல்லது தீண்டத்தகாத சாதனமோ அல்ல. சொல்லப் போனால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவன் வீட்டில் அடுப்பெரிந்தது இந்த வானொலியில் அவன் பெற்ற சம்பளத்தினால்தான். ஆனால் தற்போது வானொலி எடுத்திருக்கும் புதிய கோலத்தைச் சகிக்கமுடியாமல், வானொலிப் பணியிலிருந்து விலகி, சாயங்களும் இரசாயனங்களும் விற்கும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து அவன் வானொலியைப் பெரிதாகக் கேட்பதில்லை. இருந்திருந்துவிட்டுக் கேட்க நேரிட்டாலும் அதில் வரும் தவறுகளைக் கேட்டு, புலம்ப வேண்டியதாகிவிட்டது. அதனால் அவன் வானொலி கேட்பதைத் தவிர்த்தான். தொலைக்காட்சியும் அவ்வாறுதான். கடைசியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை எப்போது ஆறுதலாயமர்ந்து பார்த்தோம் என்பதே அவனுக்கு நினைவிலில்லை. சரி அதை விடுவோம். தற்செயலாக கேட்ட அந்தச் செய்தி அவனை நன்றாகவே குழப்பி விட்டிருந்தது.

“நாளை மறுநாள், ஆடி அமாவாசைத் தினத்திலன்று, இந்துக்கள், சமயச் சடங்குகளை நிறைவேற்ற, கொழும்பு முகத்துவாரம் கடலோரப் பகுதிக்குச் செல்ல முடியாதென கடற்படையால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை, கொழும்பு உயர் நீதிமன்றம் ரத்துச் செய்தது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த நீதிபதிகள், கடற்படையினரின் அனுமதியோடு இந்தச் சடங்குகளை நிறைவேற்றிக் கொள்ளலாமெனத் தீர்ப்புவழங்கினர்”. இத்தனை தெளிவாக, எவ்வித தமிழ்க் கொலைகளும் பிழைகளுமின்றி அந்தச் செய்தி வாசிக்கப்படாவிட்டாலும்கூட, இந்தளவாவது அவனால் விளங்கிக் கொள்ளும் வகையில் அந்தச் செய்தி ஒலிபரப்பானபோதுதான் நாளை மறுநாள் ஆடி அமாவாசை என்பது அவனுக்குத் தெரிய வந்தது.

அவனது அப்பா சடுதியாகக் காலமானபின் அடுத்தடுத்து வந்த இரண்டு ஆடி அமாவாசைக்கும் மட்டக்களப்பு மாமாங்கக் கோவிலுக்குப் போய் பிதிர்கடன் கொடுத்து, எள்ளும் தண்ணீரும் இறைத்து, தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடியது நன்றாகவே நினைவில் இருக்கிறது. தொழில் காரணமாக அவன் கொழும்பு வாசியான பின்னர், ஊர் நிலவரமும் மோசமாக, அதெல்லாம் முடியாத காரியமாகப் போய்விட்டது. பிறகு ஒவ்வொரு ஆண்டும், அப்பா, தான் இறந்த திதிக்கு சரியாக ஒருமாதம் முன்னரே அவன் அம்மாவின் கனவில் வந்து “பசிக்குது” என்று சொல்லிச் சாப்பாடு கேட்பதும், அம்மா உடனே தொலைபேசி அழைப்பெடுத்து, அவனிடம்அப்பாவின் திதி வருகுது. மறக்காமல் செய்து போடு மகன்” என்று ஞாபகப்படுத்துவதும், அவன் ஐயரை அழைத்து அல்லது கோவிலுக்குப் போய் பிதிர் கடன் கழிப்பதுமாக கொஞ்ச வருஷங்கள் கடந்தன.

அப்பா கனவில் வருவதும் திடீரென நின்றுபோக, “அப்பா எங்கையோ திரும்பவும் பிறந்திட்டார்போல. அதுதான் இப்ப கனவிலையும் வாறதில்லை” என்ற அம்மாவின் ஊகத்துக்குப் பின், திதியும் மறந்து போனது. இப்படித்தான் இருந்திருந்துவிட்டு ஆடி அமாவாசைக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன் அவனது அம்மா உட்பட யாரிடமிருந்தாவது தெரிய வரும்போது அவன் குடியிருந்த இடத்துக்குப் பக்கமாகவே இருக்கின்ற முகத்துவாரம் போய் கரையோரம் அமர்ந்திருக்கிற ஐயர்மாரில் ஒருவரைப் பிடித்து கூட்டத்தோடு கூட்டமாய் பிதிர் கடன் கழிப்பதும், விரதமிருப்பதும், பகல் பிச்சைக்காரருக்குச் சாப்பாடு கொடுப்பதுமாகச் சில வருஷங்கள் கழிந்ததுமுண்டு. இது முடியாத போது காலை முதல் பகல் வரை சாப்பிடாமலிருந்து பிச்சைக்காரருக்குச் சாப்பாட்டுப் பார்சல் கொடுப்பதோடு முடித்துவிட்டதுமுண்டு.

ஆனால் அன்றைக்கு செய்தி கேட்டதுமுதல் அவன் கொஞ்சம் குழம்பிப்போயிருந்தான். ஒன்று, அவன் கடந்த சில வருஷங்களாக ஆடி அமாவாசைக்கு முகத்துவாரம் போய், பிதிர்கடன் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு. மற்றையது யார் யாரோ மீன்பிடிக்க, காதலிக்க, கஞ்சா விற்க, ஏன் அழகிகளைக் கற்பழித்துக் கொலை செய்யவெல்லாம் தடைகளெதுவுமின்றி அனுமதிக்கப்படும் முகத்துவாரத்தில், தனது சமயச் சடங்கை நிறைவேற்ற யார் யாரிடமோ அனுமதி கேட்டுத்தான் போக வேண்டுமா என்ற ஆதங்கம்.

“கூட்டங்கூட்டமாய்ப் போய் எங்கடை உரிமையை நிலை நாட்டவேணும்” என்று அவன் உள்ளுணர்வு சொன்னாலும், யாரோ அன்னியனிடம் அனுமதி பெற்று அவன் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருக்க தன் அப்பாவுக்கான சடங்கை நிறைவேற்ற வேண்டுமா என்ற கேள்வியும் அவனுள் எழாமலில்லை. அதற்கிடையில் வேறு யாரேனும் நீதி மன்றம் போய் மீண்டும் ஒரு தடை உத்தரவு வாங்கிக் கொண்டால்..? என்ற சந்தேகமும் எழுந்து கொண்டது. ஆடி அமாவாசை நாள் அலுவலக நாள் என்பது மற்றொரு பிரச்சனை. “தனிப்பட்ட காரணங்களுக்காக விடுமுறை எடுப்பதெனில் விடுமுறை தினத்திற்குக் குறைந்தது 3 தினங்களுக்கு முன்னராவது அனுமதி பெற்றிருக்க வேண்டும்” என்று நேற்றுத்தான் அவன் நிறுவனத் தலைவர் மின்னஞ்சலில் அலுவலக சுற்றுநிருபம் அனுப்பியிருந்தார்.

யோசித்து யோசித்துக் குழம்பிப் போய் கடைசியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். மதியம்வரை விரதம். அதன் பின்னர் இரண்டு மூன்று சாப்பாட்டுப் பார்சல்கள் வாங்கி பிச்சைக்காரருக்குக் கொடுப்பது.

எடுத்த முடிவின்படி காலையிலிருந்து அவன் ஒன்றுமே சாப்பிடவில்லை. “ டயபட்டிஸ்’காரர் இப்பிடி விரதம் பிடிப்பதெல்லாம் கூடாது என்று, மருந்துப் பொருள்களை மொத்த விற்பனை செய்யும் நிறுவனமொன்றில் முன்னர் பணியாற்றி, இப்போது அவனுடன் வேலை செய்யும் நண்பர், தன் மருத்துவ அறிவைப் பகிர்ந்துகொண்டாலும், அப்பாவுக்காக ஒரு நாள் இருவேளை பட்டினியிருந்தால் ஒன்றும் நடக்காது என்று நினைத்துக்கொண்டான். இருந்தும் பகல் பன்னிரண்டு மணியாகுமுன்னரே பசி வயிற்றைக் கொஞ்சம் கிள்ளியதுதான்.

மதியச்சாப்பாட்டு நேரம். அலுவலகத்தை விட்டு காலி வீதிக்கு வந்தான். அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே காலி வீதி ஓரமாக, நிழற்குடையின்கீழ் வித விதமான சாப்பாட்டுப் பார்சல்கள் விற்கும் இரண்டு இடங்கள் இருக்கின்றன. அதில் பரபரப்பாக விற்பனை நடைபெறும் ஒரு நிழற்குடையைத் தேர்ந்தெடுத்து அருகில் போனபோதுதான், “தானமாகக் கொடுக்கும் சாப்பாடு சைவச்சாப்பாடாக இருக்க வேண்டுமா?” என்ற சந்தேகம் எழுந்தது. “சைவமெண்டால் சிலவேளை சந்தோசமாகச் சாப்பிடமாட்டாங்கள். குடுத்தும் பிரயோசனமில்லாமல் போயிடும்” என்று அவன் உள் மனம் சொன்னது. இருந்த பார்சல்களில் ‘ஸ்பெஷல்’ வகையைத்தெரிவு செய்து மூன்று பார்சல்கள் வாங்கிக் கொண்டான்.

வழக்கமாக கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில் பிச்சைக்காரர்கள் கூடியிருக்கும் இடங்கள் அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனது அலுவலகத்துப் பக்கத்திலே அசைவங்களும் விற்கும் - ஒரு சைவக்கடை உள்ளது. அதற்குப் பக்கத்திலேயே சர்வதேச உரிமத்துடன் வெள்ளைக்கார கோமாளிப் பொம்மையை வாசலில் வைத்து, ‘பேர்கர்’ விற்கும் நிலையம். இரண்டையும் ‘கவர்’ பண்ணி இடையில் சில பிச்சைக்காரர்கள் நிற்பார்கள். இல்லையென்றால் கொள்ளுப்பிட்டிச் சந்திப்பக்கம் சற்று நடந்தால் ‘கேக்’ உட்பட ‘பேக்கரி’ப் பண்டங்கள் விற்கும் இரண்டு பிரபல நிறுவனங்கள் கொஞ்சம் எதிரெதிராக உள்ளன. இவற்றுக்கு இடையே இரண்டு கடைகளையும் ‘கவர்’ பண்ணி, சிலர் இரண்டு மூன்று நாய்கள் சகிதம் இருப்பார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். அவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இந்த 3 பார்சல் காணாதுதான் என்று உள்ளூர நினைத்துக் கொண்டு எட்டி நடந்தான். பசி வேறு வயிற்றில் சில சப்தங்களை எழுப்பத் துவங்கியிருந்தது.

ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக சர்வதேச “பேர்கர்” கடைக்குப் பக்கத்தில் ஒருவரையும் காணவில்லை. இனித்தானே மதியபோசன நேரம். வருவார்கள். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாமென ஒரு ஐந்து நிமிஷம் காத்திருந்தான். ஒருவரும் வருவதாகத் தெரியவில்லை. சரி . அடுத்த இடத்துக்குப் போகலாமென “கேக்” கடைப் பக்கம் நடந்தான். அங்கும் ஒருவருமில்லை. கூட நிற்கும் நாய்களையும் கூட்டிக்கொண்டு எங்கோ போய்விட்டிருந்தார்கள். புதுப் புதுச் ‘சிந்தனைகள்’ நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதால், நாடு வளம் பெற்று, எல்லாரும் எல்லாமுமே பெற்றுவிட்டார்களோ என எண்ணியவாறே கொள்ளுப்பிட்டிச் சந்திப் பக்கமாக நடக்கத் தொடங்கினான். இடையில் ஒரு மதுபானச் சாலை இருக்கிறது. அதற்குப்பக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசிப் பிச்சையெடுக்கும் ஒரு பிச்சைக்கார(ர்)ன் இருக்கிறா(ர்)ன். அவனோடு சேர்த்து அண்மையில் ஒரு வெள்ளைக்காரியையும் கண்டிருக்கிறான். அவர்களுடன் மேலும் இரண்டு மூன்றுபேர் அந்த இடத்தில் இருப்பார்கள்; பிடிக்கலாம் என்பதே அவன் சிந்தனை. ஆனால் என்ன செய்வது? ஹும்.. அங்கும் ஏமாற்றமே.

இப்போது என்ன செய்வதென்று புரியாமல் அவன் அடுத்த இடத்தைக் குறிவைத்தான். அடுத்து கொள்ளுப்பிட்டிச் சந்தியில் உள்ள ‘சுப்பர் மார்க்கெட்’ முன்னால் இல்லையென்றால் ‘லிபேட்டி பிளாசா’ முன்னால் நிற்பார்கள். இந்த இடங்களுக்குப் போவதென்றால் ஏறத் தாழ ஒரு கிலோமீற்றராவது இன்னும் நடக்கவேண்டும். மத்தியான வெயில் ஒருபுறம். காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாததால் பசிக்களை ஒருபுறம். அது மட்டுமில்லாமல்,வலது முழங்கால் மூட்டில் கடந்தசில நாட்களாக தோன்றியிருக்கும் வலி வேறு. என்ன செய்யலாமென யோசித்தவனுக்கு அவனது அலுவலகம் ஞாபகம் வந்தது. பிச்சைக்காரர்களுக்குத்தான் சாப்பாடு கொடுக்கவேண்டுமா? பசித்தவர் யாராயிருந்தாலும் கொடுக்கலாமே என்று நினைத்துக்கொண்டான். அலுவலகத்தில் சுத்திகரிப்புப் பணிசெய்யும் பெண்ணொருத்தியும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் இருக்கிறார்கள். அவன் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுவரும் நாட்களில், அதைச் சாப்பிடமுடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் கைகொடுப்பவர்கள் இவ்விருவருமே.

அலுவலகம் நோக்கித் திரும்பி நடந்துவரும்போதுதான், வயதான ஒரு பெண்மணி கையில் ஒரு ‘பைல்’ உடன் காலி வீதியில் வீடியோக் கடையொன்றின் படிக்கட்டுகளால் இறங்கிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அந்த நிறுவன ஊழியர் ஏதோ கூறிப் பேசியபடியே அந்தப் பெண்மணியை விரட்டிக் கொண்டிருந்தார். அப்பாவியான அந்தப்பெண்மனி அழாக் குறையாக அவன் முகத்தைப் பார்த்தாள். “ என்ன?ஏன் பேசுறாங்க?” என்று சிங்களத்தில் கேட்டான் அவன்.

“ மகளுக்கு ஒப்பரேஷன் ஐயா. அதுக்குக் காசு அறவிடுகிறன். பேசி விரட்டுறாங்க”

“பகல் சாப்பிட்டாச்சா?”

“இன்னுமில்லை”

“சாப்பாட்டுப் பார்சல் ஒண்டு தரட்டா?”

“ஐயோ. தாங்கோ. பெரிய புண்ணியம் கிடைக்கும்.”

தன் அப்பாவையே கண்ட சந்தோசத்துடன் ஒரு பார்சலை எடுத்துக் கொடுத்தான் அவன்.

“ஒரு பார்சல் போதுமா. இன்னுமொண்டு தரட்டா”

“ஒண்டு போதும் ஐயா. இப்ப இதை நான் சாப்பிடுவன். நான் அத்துறுகிரிய போக பின்னேரமாயிடும். போற நேரத்துக்குச் சாப்பாடு பழுதாப்போயிடும். நீங்க வேறை யாருக்கும் குடுங்கோ. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கட்டும்” கூறிவிட்டு நடந்தாள் அவள்.

“அலுவலகத்தில் இரண்டு பேர் இருக்கிறாங்கள்தானே?. அவங்களுக்குக் குடுத்தால் கணக்குச் சரி” என நினைத்துக் கொண்டவன் எட்டி நடந்தான். அலுவலகத்துக்குள் நுழையும்போதே, வாழை இலையில் கட்டிய பெரிய சாப்பாட்டுப் பார்சலைத் திறந்து வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு ஊழியர், சாப்பிட்ட கையைப் முதுகுக்குப் பின்னால் மறைத்தபடி எழுந்து நின்றார். இனி அவரிடம் கேட்டுப் பிரயோசனமில்லை என்று நினைத்தவன்;

“இருந்து சாப்பிடும். குசுமா எங்கே?” என்றான் சிங்களத்தில்.

“அவ உள்ளுக்கிருந்து சாப்பிடுறா மாத்தயா. கூப்பிடட்டா?

“சாப்பிடுறாவோ. ச்சா. பறவாயில்ல. சாப்பிடட்டும்”

இப்போது யாருக்குப் பார்சலைக் கொடுப்பது.மீண்டும் கொள்ளுப்பிட்டிச் சந்திதான் ஒரே இலக்கு. தனது கார்க்கதவைத் திறந்து மிஞ்சிய இரண்டு பார்சல்களையும் முன் சீட்டில் வைத்துக்கொண்டு காரை கொள்ளுப்பிட்டிச் சந்தியை நோக்கிச் செலுத்தினான் அவன். போகும்போது இரண்டு பக்கமும் பிச்சைக்காரர்களைத் தேடி அவன் கண்கள் அலைந்தன. ம்ஹும்.. கொள்ளுப்பிட்டிச் சந்தி, லிபேட்டி பிளாசா வாசல், ஒருவரும் சிக்கவில்லை. மீண்டும் காரைத் திருப்பி டுப்ளிகேஷன் வீதியால் பம்பலப்பிட்டி நோக்கிச் செலுத்தினான். தூரத்தே செம்மஞ்சள் ‘டீ ஷேட்’ போட்ட நகரசபை சுத்திகரிப்பாளர் குப்பை வண்டியைத்தள்ளியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டான். காரை நிறுத்தி,

“சாப்பாட்டு பார்சலொண்டு தந்தால் சாப்பிடுவியளா” என்று தயக்கத்துடனே கேட்டான். “பறவாயில்ல. தாங்கோ”

இரண்டாவது பார்சலையும் வெற்றிகரமாகக் கொடுத்துவிட்டு மீண்டும் பம்பலப்பிட்டி சந்தியை நோக்கி காரைச் செலுத்தினான். வழக்கமாக பம்பலப்பிட்டி சந்தியில் பள்ளிவாசலுக்கு அருகிலும் சிலர் இருப்பார்கள். அன்றைக்கென்று அவர்களையும் காணவில்லை. எஞ்சிய சாப்பாட்டுப் பார்சலை என்ன செய்வது என்று தெரியாமலே மீண்டும் காரை காலி வீதியூடாக அலுவலகத்தை நோக்கிச் செலுத்தினான் அவன். அலுவலகம் வந்து காரை நிற்பாட்டும்போது பாதுகாப்பு ஊழியர் ஓடிவந்தார்.

“என்ன மாத்தயா. சாப்பாட்டுப் பார்சலும் கையுமாக அலைகிறீர்கள்” என்றான்.

“இல்லை. 3 பார்சல் வாங்கினன். பசித்தவங்களுக்குக் கொடுக்க. ஒருவரையும் காணேல்ல. ரோட்டிலை இப்ப பிச்சைக்காரருக்கும் பஞ்சமாய் போயிட்டுது” என்றான்.

மாத்தயாவுக்குத் தெரியாதுபோல. ‘சார்க்’ மாநாட்டுக்காக கொழும்பு ரோட்டிலையிருந்த பிச்சைக்காரர் எல்லாரையும் பிடிச்சுக்கொண்டுபோய் முகாமிலையெல்லோ போட்டிருக்கிறாங்கள். நாய்களையும் முனிசிப்பல்காரர் பிடிச்சிட்டுப் போயிட்டாங்கள். இந்தா எங்கடை சிங்களப் பேப்பரிலை போட்டிருக்குது. இப்ப தானம் குடுக்கவும் பிச்சைக்காரர் ரோட்டிலை இல்லை ” என்றான் சிரித்தபடியே.

அவனுக்கு அப்போதுதான் எல்லாம் விளங்கியது. எஞ்சிய சோற்றுப் பார்சலோடு அலுவலகத்தில் சாப்பிடுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் போனான். காலையிலிருந்து ஒன்றுமேயில்லாத வயிறு. நன்றாகவே பசித்தது. அலைந்த களைப்பு வேறு. அப்பாவை மனதில் நினைத்தபடி சர சரவென பார்சலைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்கினான் அவன்.

வானொலி நாடக நூல்கள் - சில மனப்பதிவுகள்

காற்றில் கலைபடைக்கும் கருவி வானொலி . அதன் படைப்புகள் அத்தனையுமே காற்றில் கரைந்துவிடுவதனாலோ என்னவோ அது படைத்தளிக்கும் கலை வடிவங்களுக்கு எவருமே கலைப்படைப்புகளுக்கான அந்தஸ்தினைத் தர மறக்கின்றனர் அல்லது மறுக்கின்றனர். வானொலியில் ஒலிபரப்பாகும் விடயதானங்கள் பெரும்பாலும் அச்சேறுவதில்லை அல்லது நூல்களாகக் தொகுக்கப்படுவதில்லை என்ற காரணத்தால் அவை எத்தனை சிறப்பான படைப்புகளாக இருந்தாலும் அவற்றுக்கு இலக்கிய அந்தஸ்துக் கிடைப்பதேயில்லை. அண்மைக்காலமாக இந்த நிலையில் சிறிது மாற்றமேற்பட்டாலும் பாரிய மாற்றமொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக வானொலி நாடகங்களின் நிலைமையோ மிகவும் கவலைக்கிடமாயுள்ளது.

அண்மையில் ஈழத்தின் பிரபல சிறுகதை, நாவல், நாடக ஆசிரியர் அமரர் இலங்கையர்கோனின் புதல்வர் ஜெயவர்மன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது தனது தந்தையாரால் எழுதப்பட்டு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான 'விதானையார் வீடு', 'லண்டன் கந்தையா', 'மிஸ்டர் குகதாசன்' போன்ற நாடகங்களினதும் ஏனைய சரித்திர, இலக்கிய நாடகங்களினதும் எந்த ஒரு பிரதியும் தமது குடும்பத்தினரிடமோ அல்லது வேறு எவரிடமுமோ இல்லை என்ற ஓர் அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் அனைவராலும் சிலாகித்துப் பேசப்பட்ட இந்த வானொலி நாடகப்பிரதிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது எவருக்குமே தெரியாத, புரியாத புதிராகவேயுள்ளது. குறிப்பாக வானொலி நாடகங்கள் நேரடியாக ஒலிபரப்பப்பட்ட காலகட்டத்தில் படைத்தளிக்கப்பட்ட இந்த நாடகப்பிரதிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொல்ல எவருமேயில்லை. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இதன் ஒலிப்பதிவுகளைத் தேடிப்பெறமுடியாது. ஏனெனில் அவை ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகவில்லை என்பது ஒரு விஷயம். அப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓரிரு நிகழ்ச்சிகள்கூட, அவை பதிவு செய்யப்பட்ட பாரிய இசைத்தட்டுக்கள் அழிவடைந்துவிட்டதால் பாவிக்கமுடியாத நிலையிலுள்ளன. தப்பிப்பிழைத்திருக்கும் சில இசைத்தட்டுக்களை இயக்குவதற்கான கருவிகளும் தற்போதில்லை.

இலங்கையர்கோனின் படைப்புகளுக்கு நேர்ந்த கதிதான் ஏனைய நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் நேர்ந்தன. வானொலி எழுத்தாளர்களும் தமது படைப்புகள் வானொலியில் ஒலிபரப்பாகும் 'திருநாளை' மட்டுமே கவனத்தில் கொண்டார்களேயன்றி, அவற்றின் இலக்கிய நோக்கம் குறித்தோ, அவற்றின் பின் தேவைகள் குறித்தோ அக்கறை கொள்ளவில்லை. தமது படைப்புகள் ஒலிபரப்பானதும் நேயர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்களில் கிறங்கிப்போய் அடுத்த படைப்புக்காகத் தம்மைத் தயார்ப்படுத்தியதில், காற்றில் கரைந்த நிகழ்ச்சிப் பிரதிபற்றி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அதனால், ஒலித்து ஓய்ந்த நாடகப் பிரதி ஒன்றைப் பெற்றுப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. இந்த எழுத்தாளர்கள் இவ்வாறு அன்று சிந்தித்திருந்தால் ஒரு காலகட்டத்தை, எமது சமூக வாழ்வியல் விழுமியங்களைப் பிரதிபலிக்கும், அரிய படைப்புகளை இன்று நாம் கைகளில் தக்கவைத்துக் கொண்டிருப்போம். அவ்வாறு தவறிப்போன முக்கியமான நாடகங்களில் சில்லையூர் செல்வராஜனின் மூலக்கதையைத் தழுவி, கே.எம். வாசகரால் எழுதித் தயாரிக்கப்பட்ட தணியாத தாகம் , மரிக்கார் ராமதாசால் எழுதப்பட்டு ஒலிபரப்பான 'கோமாளிகள் கும்மாளம்' போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்தப் போக்கிலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவராக வரணியூரான் என்ற புனை பெயரில் எழுதிய எஸ்.எஸ்.கணேசபிள்ளையை நான் காண்கிறேன். முதன்முறையாக வானொலித் தொடர் நாடகமொன்றை அதுவும் வர்த்தக நிகழ்ச்சிக்காக எழுதப்பட்ட வானொலி நாடகப் பிரதியான அசட்டு மாப்பிள்ளை'யை நூலாக்கியவர் அவர். 12 வார காலம் மில்க் வைற் சோப் நிறுவனத்தினரின் விளம்பர நிகழ்ச்சியாக வானொலியில் ஒலித்த அசட்டு மாப்பிள்ளை நாடகத்தை, மேடை நாடகமாகவும் நடிக்கக்கூடிய விதத்தில் 1975 நவம்பரில் நூலாக்கம் செய்தனர் கமலாலயம் பிரசுரத்தினர். அசட்டு மாப்பிள்ளை பின்னர் 80களிலும் மீண்டும் விளம்பரதாரர் நிகழ்சியாக வானொலியில் இடம்பெற்றபோது நான் அசட்டு மாப்பிள்ளை பாத்திரத்தில் நடித்தேன். பின்னர் வரணியூரான் தனது 'இரைதேடும் பறவைகள்' என்ற வானொலித் தொடர் நாடகத்தை, பாரிய நூலாக ஆக்கித் தந்தார். இந்த நாடகத்தை அவர் 1993ல் நூலாக்கஞ் செய்ததுடன் பல இடங்களிலும் வெளியீட்டு விழாக்களையும் ஏற்பாடு செய்திருந்தார்.

.

வரணியூரானை முன்மாதிரியாகக் கொண்டு தனது வானொலி நாடகங்களை நூலாக்க முன்வந்தார் அராலியூர் சுந்தரம்பிள்ளை. இவரால் எழுதப்பட்ட 15 நிமிட, 30 நிமிட நேர தனி நாடகங்கள் ஒன்பது, 'கெட்டிக்காரர்கள்' என்ற பெயரில் 1988 ல் வெளிவந்தன. இதனையடுத்து மேலும் 10 வானொலி நாடகங்களையும் ஓரங்க நாடகம் என்ற ஒரு கட்டுரையையும் கொண்ட 'முதலாம் பிள்ளை' என்ற நூல் 1990 லும் வெளிவந்தன. இந்த நாடக நூல்கள் நாடக எழுத்தாளர்கள் பலருக்கு உந்து சக்தியாக அமைந்தன என்றே நான் சொல்வேன். பின்னர் அவர் தனது வானொலி நாடகங்களை 1997ல் 'வீடு', என்ற நூலாகவும், 1998ல் 'யாழ்ப்பாணமா? கொழும்பா?' என்ற நூலாகவும், 2002ல் 'எங்கள் நாடு' என்ற நூலாகவும் வெளியிட்டதாக அறிகிறேன். இவற்றுள் முதல் இரு நூல்களை மட்டுமே நான் படிக்கக் கிடைத்தது. வானொலி நாடகங்களைப் பொறுத்தவரையில் அராலியூர் சுந்தரம்பிள்ளை ஒரு சாதனையாளர் என்றே கூறுவேன். 2002ம் ஆண்டின் ஆரம்பத்தில் அவரால் 330க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்குப் பின்னர் எத்தனை வானொலி நாடகங்களை அவர் எழுதினாரோ நானறியேன். அத்துடன் வானொலி நாடகங்களை 5 நூல்களாகவும் அவர் பிரசுரித்திருக்கிறார். அதுமட்டுமின்றி 25 மேடை நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்து, மேடையேற்றியுமுள்ளார். நானறிய, நாடகந்தொடர்பாக இவர் 10 நூல்களை மொத்தமாக வெளியிட்டுள்ளார். இந்த எண்ணிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது உலகில் எந்தவொரு மொழியிலேனும் இந்தளவு எண்ணிக்கைகளை எட்டிய வானொலி நாடக ஆசிரியர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்றே கேட்கத் தோன்றுகிறது.

பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராஜன் எழுதிய திரைப்படச் சுவடியான 'தணியாத தாகம்' பின்னர் மக்கள் வங்கியின் அனுசரணையுடன் அதே பெயரில் வானொலித் தொடர் நாடகமாக ஒலித்தது. கே.எம். வாசகர் எழுதி இயக்கிய இவ்வானொலி நாடகத்தின் பிரதிகள் சேகரிக்கப்பட்டு நூலாக்கம் பெற்றிருந்தால் சிறந்த ஒரு வானொலி நாடக நூலொன்று எமக்குக் கிடைத்திருக்கும். இந்நாடகம் பற்றி நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்த 'அண்ணை ரைட்' புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் இவ்வாறு நினைவு கூருகிறார்

."கே.எஸ்.பாலச்சந்திரன் (சோமு), விஜயாள் பீற்றர் (யோகம்), கமலினி செல்வராஜன் (கமலி), கே.மார்க்கண்டன் (மாமா), செல்வநாயகி தியாகராஜா (மாமி), வாசுதேவன் (குமார்), ஷாமினி ஜெயசிங்கம் (சோமுவின் காதலி), எஸ்.கே. தர்மலிங்கம் (அப்பா), யோகா தில்லைநாதன் (அம்மா), எஸ். ஜேசுரட்னம், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், எஸ்.எழில்வேந்தன் என்ற புதுக்குழு களமிறங்கியது. தொடர் நாடகம் ஆரம்பித்து சில வாரங்களில், எராளமான நேயர்கள் வானொலி நிலையத்திற்கும், மக்கள் வங்கி முகவரிக்குமாக பாராட்டுக்கடிதங்கள் எழுதத் தொடங்கினார்கள். சோமுவையும், தங்கைகள் யோகம், கமலி இருவரையும் தங்களின் உடன்பிறப்புகளாக நினைத்து, அவர்களின் துன்பங்களுக்காக கண்ணீர் விட்டு, சந்தோசங்களில் மகிழ்ச்சி அடைவதாக அந்தக்கடிதங்கள் வந்தன. நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் ஞாயிறு தோறும் நாலரை மணிக்கு வீடுகளில், தோட்டங்களில், வயல் வரப்புகளில், டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களோடு காத்திருக்கிறோம் என்றார்கள்.

ஞாயிறு 4.30க்கு " அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே..கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே" என்று ஆரம்பப்பாடல் ஒலிக்க, யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த .போ. பஸ் ஒன்றிலிருந்த பிரயாணிகளின் ஏகோபித்த வேண்டுகோளுக்க இணங்க, திருநெல்வேலி தேனீர் கடைக்கு முன்னால் பஸ் நிறுத்தப்பட்டு , தணியாத தாகம் கேட்கப்பட்டதாக யாரோ சொல்லக்கேட்டு ஆனந்தமடைந்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு அபிமான நேயர், "சோமு"வின் குடும்பக்கஷ்டத்தை பொறுக்கமுடியாமல் 100ரூபாவுக்கான காசோலையை அனுப்பியிருந்தார். தெல்லிப்பளையிலிருந்து மூன்று சகோதரிகள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை நீண்ட கடிதங்களில் எழுதி அனுப்பினார்கள். நாடகத்தை வானொலிக்கு ஏற்றவகையில் மாற்றி எழுதி வழங்கிய கே.எம்.வாசகர் , முடிவிலே இந்த சகோதரிகளின் விருப்பபடி சிறு மாற்றம் ஒன்றைச் செய்யும் அளவிற்கு அவர்களது பங்களிப்பு இருந்தது. இத்தொடர்நாடகத்தின் இறுதிக்காட்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டபொழுது, யோகத்தின் மரண ஊர்வலக் காட்சியில் நாங்கள் எல்லோரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தடுமாறினோம். நீண்ட நாட்களாக அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடமுடியாமல் தவித்தோம். இப்படி ஒரு வானொலி நாடகம் நிறைவெய்தியது. "

ஏற்கனவே நூலான திரைப்பிரதியொன்று வானொலி நாடகமான வரலாறு இது. இதே நூலைத் தந்த சில்லையூர் செல்வராஜன் அவர்கள் ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ - ஜூலியட்'டைத் தமிழில் கவிதை நாடகமாக்கித் தந்திருந்தார். ஒலிபரப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீதின் தயாரிப்பில் ஒலித்த இந்த ஒருமணி நேர வானொலி நாடகம் பின்னர் நூலுருப்பெற்றது. 'ரோமியோ ஜூலியட்' கவிதை நாடகத்தை ஒருபுறத்திலிருந்து படித்து முடித்து விட்டு நூலைத் தலைகீழாகப் பிடித்து மறுபுறத்தின் ஆரம்பத்திலிருந்து சில்லையூரார் ஷேக்ஸ்பியரைப்பற்றி எழுதிய "ஷேக்ஸ்பியர் ஒரு ஜீவ நதி" எனும் நீண்ட ஆய்வுக்கட்டுரையைப் படிக்கக் கூடியவகையில் புதிய உத்தியைப் பயன்படுத்தி இந்நூல் அச்சிடப்பட்டிருந்தது.

வவுனியாவிலிருந்து எழுத்தூழியம்செய்யும் தமிழ்மணி கவிஞர் அகளங்கன் (நா.தர்மராசா) அமரர் ஜோர்ஜ் சந்திரசேகரன் வானொலி நாடகத் தயாரிப்பாளராக இருந்த வேளையில் நல்ல பல சமூக நாடகங்களை எழுதிவந்தார். இவ்வாறு எழுதப்பட்ட ஐந்து நாடகங்களைத் தொகுத்து 1992ல் 'அன்றில் பறவைகள்' என்ற பெயரில் நூலாக்கினார். அகளங்கனின் இந்த நூலுக்கு தேசிய சாகித்திய மண்டல விருது கிடைத்தது. தேசிய சாகித்ய மண்டல விருது பெற்ற ஒரேயொரு வானொலி நாடக நூல் இதுவென்பது குறித்துரைக்கப்படவேண்டியதே. கவிஞர் அகளங்கன், நான் வானொலி நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் சிறந்த இலக்கிய நாடகங்கள் பலவற்றை எழுதினார். அவ்வாறு ஒலிபரப்பான இலக்கிய நாடகங்கள் ஆறைத் தேர்ந்தெடுத்து 1994ல் வெளியிட்ட 'இலக்கிய நாடகங்கள்' நூலுக்கு வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய நூல் விருது கிடைத்தது. அத்துடன் ஓய்ந்து போகாத அகளங்கன், ' கூவாத குயில்கள்' என்ற மற்றொரு வானொலி நாடக நூலை 2002ல் வெளியிட்டார்.

இலங்கை வானொலியின் முஸ்லீம் சேவையில் மர்ஹூம் எம்.எச்.குத்தூசுக்குப்பின்னர் வானொலி நாடகத் தயாரிப்பாளராகக் கடமையாற்றியவர் எம்.அஷ்ரப் கான் அவர்கள். 1958லிருந்து வவனொலி நாடகங்களை எழுதிவரும் அஷ்ரப் கான் தனது 10 வானொலி நாடகங்களைத் தொகுத்து முள் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.1999ல் வெளியான முள்ளில் காணப்படும் வானொலி நாடகங்கள், இலங்கை வானொலியின் முஸ்லீம் சேவையிலும் தமிழ்ச் சேவையிலும் ஒலிபரப்பான நாடகப் பிரதிகளின் தொகுப்பாகும். நூற்றுக்கணக்கான நாடகங்களை எழுதித் தயாரித்த அஷ்ரப் கான் வெரும் 10 நாடகங்களை மட்டுமே நூலாக்கியுள்ளமை ஏமாற்றமே.

1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான முதல் 8 ஆண்டுகள் சிறுவர் மலரின் வானொலி மாமாவாகச் செயற்பட்ட நான், இலங்கை வானொலியிலிருந்து விலகிச்செல்ல, டிசம்பர் மாதம் முதலாந் திகதியிலிருந்து வி.என்.எஸ். உதயசந்திரன் வானொலி மாமாவாகச் செயற்படத்தொடங்கினார். 5 ஆண்டுகள் சிறுவர் மலரில் ஒலித்த தனது சிறுவர் நாடகங்கள் சிலவற்றை 2000ஆம் ஆண்டில் அவர் நூலுருவாக்கினார். தமிழில் முதன்முதலில் வெளி வந்த வானொலிச் சிறுவர் நாடகநூல் இதுவாகும். இவர் வானொலி நாடக நடிகராகவும் இருந்ததால் வானொலி நாடகங்கள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதை அனுபவரீதியாக அறிந்தவர். இன்றைய வானொலி நிகழ்ச்சிகளில் மிக நீண்ட வரலாறு கொண்ட நிகழ்ச்சி சிறுவர் மலராகும். சிறுவர் மலரில் அவ்வப்போது எத்தனையோ அம்சங்கள் மாறிமாறி வந்திருக்கின்றன. ஆனால் மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருவது குட்டி நாடகங்களே. சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் என்ற தலைப்பிலான இந்நாடக நூல் 2000 ஆம் ஆண்டுக்கான வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் சிறுவர் இலக்கியத் துறைக்கான பரிசு பெற்றது. வி.என்.எஸ். உதயசந்திரனின் சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள், மீண்டும் 2002லும், 2006லும் மீள் பதிப்பாக வெளிவந்து சாதனை படைத்தது. வானொலி நாடக நூலொன்று இரண்டு தடவைகள் மறுபதிப்புக் கண்டமை என்பது இந்நூலிற்குக் கிடைத்த சாதனை வெற்றியாகும்.


உதயசந்திரனின் சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் தந்த உந்து சக்தியின் காரணமாகவோ தெரியவில்லை, 'மறை முதல்வன்' என்ற புனைபெயரில் வானொலி நாடகங்களை எழுதிவரும் ஜீ. பீ. வேதநாயகமும் தான் சிறுவர் மலருக்காக எழுதிய பதினேழு குட்டி நாடகங்களைத் தொகுத்து நாளைய நாயகன் சிறுவர் (மலர்) நாடகங்கள் என்ற நூலை வெளியிட்டார். மறைமுதல்வனும் ஓர் ஒலிபரப்பாளர்;வானொலி நாடக நடிகர்; எழுத்தாளர். அத்துடன் தொழில் ரீதியாக ஆசிரியத் தொழில் புரிந்தவர். சிறுவர் உளவியல் அறிந்தவர். 2001ல் வெளியிடப்பட்ட அவரது நாளைய நாயகன் சிறுவர் (மலர்) நாடகங்கள் நூல் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டன. 'மறை முதல்வன்' ஜீ. பீ. வேதநாயகம் தனது வானொலி நகைச்சுவை நாடகங்கள் பதினொன்றை தேர்ந்தெடுத்து கழுதைக்கும் காலம் வரும் என்ற தலைப்பில் 2005ல் மணிமேகலைப் பிரசுரமாக வெளியிட்டார். தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான (அப்புசாமி-சீதாப்பாட்டி புகழ்) பாக்கியம் கந்தசாமியின் முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.

வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்த அருணா செல்லத்துரை அவ்வப்போது வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகப் பிரதிகளை எழுதி வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிக்காக எழுதிய வீடு நாடப் பிரதியையும் வேறு சில வானொலி நாடகப் பிரதிகளையும் சேர்த்து வீடு தொலைக்காட்சி நாடகமும் வானொலி நாடகங்களும் என்ற நூலை 1993ல் வெளியிட்டார், இந்நூலுக்கு 1994ல் யாழ் இலக்கியப் பேரவையின் சிறந்த நாடக நூலுக்கான இலக்கியச் சான்றிதழ் விருது கிடைத்தது. அத்துடன் வன்னிப் பாரம்பரிய வரலாற்றையொட்டி அவர் படைத்த நந்தி உடையார் வானொலி நாடகப்பிரதி 1996ல் நூலாக்கம் பெற்றது. 1996ம் ஆண்டு சாகித்ய மண்டலப் பரிசும்,வானொலி நாடகத்திற்கான உண்டா அபிநந்தன தங்க விருதும் இதற்குக் கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கவை.

வெறும் களிப்பூட்டலை மட்டுமே மையமாகக் கொண்டு ஒலிபரப்பான வானொலி நாடகங்கள், முகத்தார் வீட்டில் என்ற விவசாய நாடக ஒலிபரப்புடன் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது. எஸ்.யேசுரத்தினத்தின் எழுத்தாக்கத்திலும், விவசாயத் திணைக்களத்தின் பண்ணை ஒலிபரப்புச் சேவையின் நிதி அனுசரணையோடும் ஒலித்த இந்த விவசாய நாடகம், நகைச்சுவையோடு விவசாயத் தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் ஒலிபரப்பப்பட்டது. 5 ஆண்டுகாலத்திற்கும் மேலாக, சரியாகச் சொல்வதானால் 268 வாரங்கள் தொடர்ச்சியாக ஒலித்த இந்நாடகத்தின், ஆசிரியர் எஸ். யேசுரத்தினம், 1993ல் புலம்பெயர்ந்து ஃப்ரான்ஸ் நாட்டில் வசிக்கிறார். ஃபிரான்ஸில் இருந்து கொண்டே யேசுரத்தினம் அவர்கள், முகத்தார் வீட்டில் வானொலி நாடகப் பிரதிகள் ஐந்து, மேடை நாடகங்கள் மூன்று, வேறு வானொலிநாடகப் பிரதிகள் நான்கு என மொத்தம் 12 நாடகங்களை முகத்தார் வீட்டுப் பொங்கல் என்ற பெயரில் மணிமேகலைப் பிரசுரமாக வெளியிட்டுள்ளார். 1999ல் இந்நூல் வெளியிடப்பட்டது.

எனது தந்தையார் கவிஞர் நீலாவணன் எழுதி 1962 ல் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய இலங்கையர்கோன் நினைவுக் கலை விழாவில் மேடையேற்றம் பெற்ற கவிதை நாடகம் மழைக்கை. பின்னர் இக்கவிதை நாடகம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பானது. இந்த நாடகத்துடன், 1961 மே மாதத்தில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகவிருந்து, அப்போது அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலைகாரணமாக ரத்துச் செய்யப்பட்ட கற்பனைக் கண் (மனக்கண்) கவிதை நாடகத்தையும் சிலம்பு, துணை ஆகிய வேறு இரு கவிதை நாடகங்களையும் சேர்த்து 2005ல் நீலாவணன் கவிதை நாடகங்கள் என்ற நூலாக வெளியிட்டேன். இந்நூலுக்கு 2005ஆம் ஆண்டின் நாடக நூலுக்கான தேசிய சாகித்ய மண்டல விருதும், வடகிழக்கு மாகாண இலக்கிய விருதும் கிடைத்தன. இந்த நூல் வெளிவந்ததன்பின் அதிலுள்ள மழைக்கை, மனக்கண் ஆகிய இரு கவிதை நாடகங்களையும் 2007ல் இலங்கை சூரியன் எஃப்.எம். வானொலி ஒலிபரப்பியது.