Thursday, December 2, 2010

முகத்தார் எஸ் ஜேசுரத்தினம் -சில நினைவுப் பதிவுகள்


கடந்த ஞாயிறு காலை 6 மணியிருக்கும். தொலைபேசி அழைப்பொன்று நித்திரையிலிருந்து என்னை எழுப்புகிறது.

மறுமுனையில் "அண்ணை. செய்தி தெரியுமா?" என்கிறது ஆர்.யோகராஜனின் குரல்.

"என்ன செய்தி?" என்கிறேன்.

"முகத்தாரெல்லே மோசம் போய்ட்டாராம்" இது யோகராஜன்.

அதிர்ச்சியில் உறைந்த என்னை "அண்ணை அவரைப்பற்றி ரேடியோவில் ஒரு நினைவுப் பகிர்வு செய்ய வேண்டும். செய்யிறீங்களா?" என்கிறான் தம்பி யோகராஜன்.

"ஓம் செய்வோமே" என்கிறேன்.

என் நினைவுகள் பின்நோக்கிப் பறக்கின்றன.

000000

79 ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தரமாக நான் இணைந்து கொண்டாலும் 76 ஆம் ஆண்டிலிருந்து வானொலிக் கலைஞனாகக் குரல் தேர்ச்சி பெற்று வானொலி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்தேன்.

வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் செல்லும் போதெல்லாம் முறுக்கிய மீசை, மிடுக்கான நடை , கம்பீரமான குரல் என்பவற்றோடு ஒரு ஆஜானுபாகுவான மனிதர் தமிழ் நாடக நிகழ்ச்சிகளிலே கலந்துகொள்ள வருவதைக் கண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் அவர் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருக்கவேண்டுமென நான் நினைத்திருந்தேன்.

அப்போது வானொலியில் நாடகத் தயாரிப்பாளராக விளங்கிய கே எம் வாசகரின் தயாரிப்பில் ஒலிபரப்பான நாடகங்களிலும், கதம்பம் என்ற பெயரில் ஒலிபரப்பான நகைச்சுவை நாடக நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் அவர் எஸ். ஜேசுரத்தினம் என்பதைப் பின்னர்தான் அறிந்துகொண்டேன். அவ்வப்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் 'மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்ட்' என்று அழைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் திணைக்களத்தில் கணக்குப் பிரிவிலே நல்லதொரு பதவியில் இருந்தார் என்று பின்நாட்களில் அறிந்துகொண்டேன் .

கலகலவென கள்ளமில்லாமல் சத்தமிட்டுச் சிரிப்பதுடன் எப்போதுமே புன்முறுவல் பூத்தவராக உற்சாகமாகவே காணப்பட்ட ஜேசு எல்லோரையும் போல என்னையும் கவர்ந்ததில் வியப்பில்லைத்தான்.

அந்தக் காலத்தில்தான் அமரர் சில்லையூராரின் திரைப்படப் பிரதியான 'தணியாத தாகம்' அமரர் கே எம் வாசகரின் கைவண்ணத்தில் வானொலி நாடகமாக உருப்பெற்றது. இந்த நாடகத்தின் ராஜன் என்ற பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த நாடகத்தில் ஒரு மலேஷியன் பென்ஷனியராக நடித்தவர் எஸ்.யேசுரத்தினம்.

ஓர் உயர் மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பாத்திரத்தைத் தனது நடிப்பின் மூலம் அவர் உயிர்ப்புடன் வெளிக்கொண்டு வந்தார் என்று சொல்லவேண்டும். ஆங்கிலச் சொற்களை அற்புதமாக உச்சரிப்பதுடன் யாழ்ப்பாண மேற்தட்டு வர்க்கத்தினரில் உடல் மொழியைத் தனது குரலினாலே வெளிக்கொண்டு வந்தார் ஜேசுரத்தினம். இந்தக் காலந்தான் ஜேசுரத்தினத்தை ஜேசு என்று அழைக்கும் நெருக்கத்தை ஈட்டித்தந்தது.

ஒவ்வொரு நாடக ஒலிப்பதிவின் பின்னரும் 'டேய் எப்பிடிடா இருந்தது?" என்று சின்னப் பிள்ளைகள் போன்று கேட்பார். "நல்லாயிருந்தது ஜேசு" என்றால், தன் முறுக்கு மீசையைப் புறங்கையால் தடவியபடியே புன்முறுவல் பூப்பார்.

நாடக ஒலிப்பதிவுகளின் பின்னர் வானொலி நிலையத்திற்கு வெளியே நடக்கும் 'தாக சாந்தி' களின்போது நான் பார்வையாளனாக இருந்து ஜேசுவின் நகைச்சுவைக் கதைகளைக் கேட்டுச் சிரித்து மகிழ்வதுண்டு.

‘தணியாத தாகம்’ நாடகம் மேடைக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம் உட்பட 3 மேடைகளில் அரங்காற்றுகையானபோது ஜேசுவுடன் யாழ்ப்பாணம் ரயிலில் பயணித்ததும், அவருடன் மேடையில் தோன்றி நடித்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

இவ்வாறு அவ்வப்போது நிகழ்ந்து வந்த எங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழ்வதற்கு வாய்ப்பொன்று விவசாய ஒலிபரப்புச் சேவையின் உதவியோடு வாய்த்தது.

80 களின் ஆரம்பத்தில் விவசாய ஒலிபரப்புச் சேவையில் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான சி. ஸ்ரீஸ்கந்தராஜா, விவசாயத் தகவல்களை நாடக வடிவத்தில் வழங்கும் எண்ணத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு முன்வைத்தார். இந்த எண்ணக் கருவே, பிரதி வெள்ளிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பான 'முகத்தார் வீட்டில்' என்ற விவசாய நாடகத் தொடருக்கு வழி கோலியது.

15 நிமிடத்துக்குள் ஒரு விவசாயக் குடும்பத்துள் நடக்கும் நகைச்சுவையான சம்பவங்களுடன் விவசாயத் தகவல்களை வழங்குமொரு நிகழ்ச்சியாக 'முகத்தார் வீட்டில்' மாறியது. விவசாயத் தகவல் என்பது எல்லோரையும் கவரும் ஒரு விடயமல்ல. ஆனால் 'முகத்தார் வீட்டில்' நாடக நிகழ்ச்சி, வயது, சமயம், பால் நிலை வித்தியாசங்களின்றி அனைவரையும் கவர்ந்து 5 வருடங்களுக்கும் மேல் ஒலிபரப்பாகிச் சாதனை படைத்ததென்பது எஸ் ஜேசுரத்தினத்தின் எழுத்துக்கும் நடிப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்வேன்

வெறும் களிப்பூட்டலை மட்டுமே மையமாகக் கொண்டு ஒலிபரப்பான வானொலி நாடகங்கள், “முகத்தார் வீட்டில்” என்ற இந்த விவசாய நாடக ஒலிபரப்புடன் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது. 5 ஆண்டு காலத்திற்கும் மேலாக, சரியாகச் சொல்வதானால் (83 இனக்கலவரத்தின் போது மறு ஒலிபரப்புச் செய்யப்பட்ட அங்கங்களுக்குப் புறம்பாக) 268 வாரங்கள் தொடர்ச்சியாக ஒலித்தது முகத்தார் வீட்டில் நாடகம்.

இதில் முகத்தாராக நடித்த ஜேசுவின் மனைவி தெய்வானை (ஏ எம் சீ ஜெயஜோதி) யின் இளைய சகோதரன் சரவணையாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஜேசுரத்தினம், ஏ எம் சீ ஜெயஜோதி, நான் என்ற முக்கூட்டணியுடன் ஒவ்வொரு வாரமும் இன்னுமொரு பாத்திரமும் கலந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருந்த இந்த நாடகத்தில் சரவனையெனும் நான் அடிவாங்காத நாட்களே கிடையாது என்னும் வகையில் நாடகத்தினை நடத்திசெல்வார் ஜேசு.

ஜேசுவையும் என்னையும் நினைத்தால் ஆங்கிலக் கார்ட்டூன் கதைகளில் வரும் 'டொம் அண்ட் ஜெரி' பாத்திரங்களே என் நினைவுக்கு வரும். பெரியத்தார் என்று பாசமாக அழைத்துக்கொண்டே நான் செய்யும் அசட்டுக் காரியங்கள் அவரைச் சிக்கலில் மாட்டும். எனக்குச் சித்திரவதை கிடைக்கும். அக்கா தெய்வானை என் பக்கம்.

இந்த நாடகத்தைக் கேட்ட நாட்டின் சகல பகுதிகளையும் சேர்ந்த வயதான தாய்மார், என்மீது அனுதாபப்பட்டு என் அபிமானிகளாகியதும் இங்கு குறிப்பிடவேண்டியதே.

இந்த நாடக ஆக்கங்களின் போது ஜேசுவின் செய் நேர்த்தியை நான் கண்டு வியந்திருக்கிறேன். நாடகத்தில் வரும் அனைத்துத் தகவல்களும் சரியாக இருக்கவேண்டுமென்பதில் ஜேசு மிகுந்த அக்கறையுடனிருப்பார். ஒருமுறை கலையகத்திற்கு வரும்போது சீன உணவகமொன்றின் உணவுப் பட்டியலை (மெனு கார்ட்டை) அவர் கையோடு எடுத்து வந்திருந்தார். ஏனென்று கேட்டபோது அடுத்த அங்கத்திலே கப்பலில் போன அவர் மகன் சீன உணவகமொன்றுக்குக் போவதாகவும் அவன் கூறிய உணவு வகைகளை அப்படியே காட்சியில் சொல்லவேண்டுமென்பதற்காக, அதை எடுத்துக்கொண்டு வந்ததுடன் அதிலுள்ள பெயர்களை எப்படி உச்சரிப்பதென உணவகத்தாரைக் கேட்டுத் தமிழில் அவற்றை எழுதியும் வந்திருந்தார்.

இவ்வாறுதான் பரியாரியாரின் வாகடமும், பண்டிதரின் இலக்கணமும், சாத்தியாரின் பஞ்சாங்கமும் இல்லாமல் அவர்களைப் பற்றி ஜேசு எழுதமாட்டார்.

மகன் கப்பலில் போனதாக எழுதும்போதெல்லாம் சரியான கடல் வழிகளும், துறைமுகங்களும், நாணயங்களும் அவர் பிரதியில் அப்படியே இருக்கும்.

முகத்தார் வீட்டின் ஒலிபரப்பு வெற்றி காரணமாக 80களின் நடுப்பகுதியில் வன்னியில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மைதானத்திலே முகத்தார் வீட்டில் நாடகத்தை நாங்கள் அரங்கேற்றினோம் என்பதையும் இவ்வேளையில் குறிப்பிடவேண்டும்.

இந்த நாடகத்தின் வெற்றி காரணமாகவே வெறுமனே எஸ் ஜேசுரத்திரமாக இருந்தவர் முகத்தார் ஜேசுரத்தினமாக மாறினார். அவரை முகத்தார் ஜேசுரத்தினம் என அழைப்பதிலே அவருக்கு மகிழ்ச்சியும் பெருமையும் கிடைத்தது.

இதற்கிடையில் இலங்கையில் உருவான 'வாடைக்காற்று' என்ற திரைப்படத்தில் பொன்னுக் கிழவராக அவர் நடித்ததும் அந்தப் பாத்திரப் படைப்புக்காக ஜேசு ஜனாதிபதி விருது வென்றதும் ஞாபகத்தில் வந்து செல்கிறது.

ஜேசுரத்தினம், 1993ல் புலம்பெயர்ந்து ஃப்ரான்ஸ் நாட்டில் அவரது பிள்ளைகளுடன் வசிப்பதற்காகச் சென்றுவிட்டார். அத்துடன் அவருடனான தொடர்பும் அற்றுப்போய் விட்டது. ஆனால் அவர் புலம்பெயர் தேசங்களிலே தயாரிக்கப்பட்ட வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்ததாகச் செய்திகள் மூலம் அறிந்து மகிழ்ந்தோம்.

7 ஆண்டுகளுக்கு முன் ஒலிபரப்புப் பணியொன்றின் நிமித்தம் எனக்கு பிரான்ஸ் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்குக் கிடைத்ததோ 10 நாள் எனும் குறுகிய காலப் பயண வாய்ப்பு. இதில் ஜேசுவைச் சந்திப்பேன் என்பதைக் கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை. அவ்வாறான திட்டமும் என்னிடம் இருக்கவில்லை.

ஆனால் நான் பரீஸ் வந்திருப்பதை எப்படியோ அறிந்த ஜேசு, நான் தங்கியிருந்த முகவரியின் தொலைபேசி இலக்கத்தை அவரது பரீஸ் நகரத் தமிழ் வானொலி நண்பர்கள் மூலம் தேடிப்பிடித்து, அதே கம்பீரமான தொனியில் "எழில் வாடா நாங்கள் 'முகத்தார் வீட்டில்' நாடகப் பிரதிகளை இங்கும் ஒலிப்பதிவு செய்வோம்' என அழைத்தார்.

இரவோடு இரவாக முகத்தார், சரவணை, அப்புக்குட்டி (ராஜகோபால்) ஆகிய பாத்திரங்களை வைத்து அவர் எழுதிய 3 பிரதிகளையும் நாம் அடுத்த நாள் ஒலிப்பதிவு செய்தபோது அவர் முகத்தில் நான்கண்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் இன்றைக்கும் எண்ணிப் பார்க்கிறேன்.

பிரான்ஸில் இருந்து கொண்டே ஜேசுரத்தினம் , 'முகத்தார் வீட்டில்' வானொலி நாடகப் பிரதிகள் ஐந்து, மேடை நாடகங்கள் மூன்று, வேறு வானொலி நாடகப் பிரதிகள் நான்கு என மொத்தம் 12 நாடகங்களை “முகத்தார் வீட்டுப் பொங்கல்” என்ற பெயரில் 1999ல் மணிமேகலைப் பிரசுரமாக வெளியிட்டிருந்தார்.

அந்த நூலின் பிரதியொன்றை அப்போது அன்பளிப்பாகத் தந்த அவர், இன்னுமொரு புத்தகம் போடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அதன் வேலைகளுக்காகத் தமிழ்நாட்டுக்கு வரவிருப்பதாகவும் அப்போது சந்திப்போம் என்றும் சொன்னார்.

ஆனால் அந்தப் பொன்னான நாள் வராமலே போயிற்று.

பரிசிலிருந்து நண்பர் எஸ் கே ராஜன் தொலைபேசியில் அழைத்தபோது சொன்னார், "எப்போது அவருடன் எதைப்பற்றி உரையாடக் கிடைத்தாலும் உங்களுடைய பெயரை அவர் ஒருதடவையேனும் குறிப்பிட மறக்கமாட்டார்" என்றார்.

"நீங்கள் மறக்காமல் இருக்கும் அளவிற்கு நான் என்ன செய்துவிட்டேன் பெரியத்தார்! சென்றுவாருங்கள். உங்கள் நினைவோடு இங்கு நாம் இருப்போம்."