Wednesday, December 20, 2006

"வானொலி ஒன்பது" - (குறும்பாக்கள்)

வானொலியை மார்க்கோனி படைத்தார்!
வரும் பலன்கள் பலவென்றே நினைத்தார்!
ஆனபயன் (F.M) எப். எம்மால்,
அகிலத்திற்கில்லையென,
தானறிந்தால், மீண்டுமுயிர் துறப்பார்.

வானொலியைப் போட்டாலே ஆச்சு,
வளவளப்பு 'டெலிபோனில்' பேச்சு.!
போனதந்தப் பொற்காலம்,
புதுமைசெய்த வானொலிக்கு,
ஆன புகழ், பேர், பெருமை போச்சு!

ஊரெங்கும் வானொலியோ கொள்ளை!
உருப்படியாய் ஒன்றேனும் இல்லை!
பாரத சஞ்சிகைத் துணுக்கை,
பாடல்களை ஒலிபரப்பி
நாறடிப்பார்! நமக்கதுவே தொல்லை!

காணுகிற நேரமெலாம் பாட்டு,
கண்ட கண்ட பெயர் சொல்லிப் போட்டு
வானொலியென்றால் எனக்கு
வாந்திவரச் செய்துவிட்டார்
காணுமிந்தக் காதுவலி! பூட்டு.

'அந்தவகை' 'இந்தவகை' இல்லாட்டில்
அவர்பாடோ அந்தரத்துத் தொட்டில்
'எந்தவகை' பேசுவது
என்றிவர்க்குத் தெரியாது
வந்ததையா வானொலி இக்கட்டில்

நல்ல தமிழ் பேசாதே! பத்து,
நரம்பேனும் தெறித்திடவே கத்து!
மெல்ல இது 'ஜோக்' என்று
மெதுவாகச் சொல்! சிரித்து,
எல்லோரின் காதிலும் பூச்சுத்து!

'ல'கரத்தை 'ழ' 'ள' வென்றாக்கு!
'ன'கரத்தை 'ண' வென்றும் ஆக்கு!
சிகரத்தை எட்டியதாய்
சிலம்பாட்டம் ஆடும் உனை,
இகழ்வார்கள். போய் வழி உன் நாக்கு!

அறிவிப்பு செய்வதற்குத் தகுதி
ஆட்களுக்குத் தேவையில்லை மிகுதி
முறையற்றுப் பேசுதற்கும்
முக்கி முக்கிக் கத்துதற்கும்
தெரியுமென்றால்.. போய்ச் சேர் அப்பகுதி

( இனி, வீரகேசரி வாரமஞ்சரியில் வெளிவந்த ஒரு குறும்பா சில மாற்றங்களுடன்)

பாட்டுகளை மாற்றி இவர் தந்தார்
பகிடிவிட்டுத் தான் சிரித்து நொந்தார்!
சேட்டை விட்டார் டெலிபோனில்!
செய்கருமந்தனில் மட்டும்
கோட்டை விட்டார்! தமிழ்த் தாயோ நொந்தாள்!

Monday, December 18, 2006

அடுத்த பிறப்பு

நேற்றிரவு, தொலைக்காட்சி
நிகழ்ச்சியொன்றை நான் பார்த்தேன்.

காட்டில் அலைகையிலே
கால்களிலே காயமுற்ற
காட்டு நரியொன்றைக்
கவனமாய் கைப்பற்றி..
காரொன்றில் ஏற்றி
கனதூரம் எடுத்துவந்து,
காலுக்கு மருந்திட்டு,
கட்டிட்டு மீண்டுமதை,
காரேற்றிக் கொண்டுவந்து
காட்டிலதைவிட்டார்கள்.
பத்துப்பேர் மட்டில் இந்தப்
பணியில் உழைத்தார்கள்.

இது எம்மூரிலல்ல.
எங்கோ ஓர் வெளிநாட்டில்!

மற்றோர் அலைவரிசை
மாற்றி அதைப் பார்த்தேன்.

முன்னரங்கப் பகுதியாம்
முகமாலை ஊரதனில்
படை நடத்தி வந்து
பலியான வீரர் உடற்
பாகங்கள் பலவற்றை
பார்த்து, அவற்றையெல்லாம்
கூட்டியள்ளிக்கொண்டு சென்று
கொழுத்தியதாய்ச் சொன்னர்கள்.

பக்கத்தே கிடந்த ஒரு
பத்திரிகையைப் பார்த்தேன்.

நாதியற்று வடிகாலில்
நாணம்மறைக்கவென
ஆடையெதும் இன்றி
அனாதையெனக் கிடந்த
ஆணின் உடல் பற்றி
அறிவித்ததொரு செய்தி.

ஆண்டவனே! மீண்டுமெனக்கு
அடுத்த பிறப்பளித்தால்..
காட்டு நரிப் பிறப்பெடுக்கும்
கருனையினைச் செய்வாயா?

அதுவும் ஒரு வெளிநாட்டில்!

Thursday, December 14, 2006

அவன் பொருளை அவனே எடுத்தால்..?

நாளிதழ் செய்தி-
"திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் திருட்டு"
திருடப்பட்டவை....?
தங்க நாணயங்கள் முன்னூறூ!!!
கோவிலில் விற்பனைக்கிருந்தவை
கொள்ளை போனதாம்.
பொறுப்பாயிருந்தவர்மீதுதான் சந்தேகம்.
அவர் பெயர்: "வெங்கடாசலபதி."
அவன(ர)து பொருளை அவனே(ரே) எடுத்தால்
அதற்கும் தண்டனையா?
தெரியவில்லயே!
(இன்றைய தினமலர் செய்தியொன்று)

நான் -1

ஈழத்தின் கிழக்கில் ஒரு குக்கிராமம்.
பிரதான வீதியில் இருந்தாலும்..
என் ஊர் அவ்வளவு பிரதானமாகப் பலருக்குத் தெரியவில்லை.
அதனால்தான் என்னவோ,
என் முதல் எழுத்துக்குரியவர்
இந்த ஊரின் பெயரையே தன் புனை பெயராக வைத்துக்கொண்டார்.
அதனால் ஊர் பிரபலமானதா?
ஊரால் அவர் பிரபலமானாரா?
முதலாவதே நடந்தது.

பாண்டிருப்பு மெதடிஸ்த தமிழ்க் கலவன் பாடசாலையில் அரிவரி (அரிச்சுவடி) சொல்லித்தந்த ஜெயசுந்தரம் மாஸ்டரை கனவுபோல் நினைவிருக்கிறது.
அதன்பிறகு... அப்பாவின் வகுப்பில் பிரம்பெடுத்து மாணவரை மிரட்டியது, அம்மை தடுப்பூசி குத்த வந்தவரைக் கண்டு, பயத்தில் பள்ளியால் பாய்ந்தோடி பக்கத்துக் காட்டில் ஒளிந்தது, கணிதத்துக்கு 99 புள்ளி பெற்றதற்காக வகுப்பாசிரியரான அப்பாவிடமே அடிவாங்கியது, அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த அப்பாவின் தாய் மாமனாரின் "நம் பிள்ளைக்கு அடித்துப் படிப்பிச்சால் ஊரார் பிள்ளைகள் தானாய் திருந்திப் படிக்குங்கள்" என்ற உபதேச மொழிகளைக் கேட்டதும்.. அதுபோல் அடி வாங்கியதுமென்று கசப்பான பள்ளி வாழ்க்கை அனுபவங்கள் சில அமைந்திருந்தாலும் , எலி ஓட்டப் போட்டியில் ஓடுவதற்கே பச்சை முட்டையுடன் குளுக்கோஸ் குடித்தது, நாடகப் போட்டியில் பரிசு வாங்கியது, ஆங்கில வாத்தியாருடன் சவால் விட்டது என சந்தோசமான அனுபவங்களும் இல்லாமலில்லை. அவை.. பின்னர்....

Friday, December 1, 2006

என் வலையில் வீழ்ந்தோரே. வணக்கம்

"மன உழைச்சல் தீர்க்க மருந்துண்டா..?"
நண்பன் ஒருவனை நான் கேட்டேன்.
எழுதென்றான்.
எங்கென்றேன்.
எங்கேனுமென்றான்.
உழைச்சல் தரும் நிகழ்ச்சிகளைக் காணும்போதெல்லாம்
மனதோடு சேர்ந்து..
கையும் உழைச்சல் கண்டது.
அப்பியாசப் புத்தகம் ஒன்று
அதன் விளைவுகளை
விரும்பி ஏற்றது..

பலநாள் கழித்து பார்க்கையில்.. படிக்கையில்
என் எழுத்தே எனக்கு இனிப்பாயிருந்தது..
நான் பெற்ற இ(து)ன்பம்
பெறுக இவ்வையகம்..
மாட்டினீர் என் வலையில்!
தப்ப வழியில்லை.
நன்றி வணக்கம்.