Thursday, December 14, 2006

நான் -1

ஈழத்தின் கிழக்கில் ஒரு குக்கிராமம்.
பிரதான வீதியில் இருந்தாலும்..
என் ஊர் அவ்வளவு பிரதானமாகப் பலருக்குத் தெரியவில்லை.
அதனால்தான் என்னவோ,
என் முதல் எழுத்துக்குரியவர்
இந்த ஊரின் பெயரையே தன் புனை பெயராக வைத்துக்கொண்டார்.
அதனால் ஊர் பிரபலமானதா?
ஊரால் அவர் பிரபலமானாரா?
முதலாவதே நடந்தது.

பாண்டிருப்பு மெதடிஸ்த தமிழ்க் கலவன் பாடசாலையில் அரிவரி (அரிச்சுவடி) சொல்லித்தந்த ஜெயசுந்தரம் மாஸ்டரை கனவுபோல் நினைவிருக்கிறது.
அதன்பிறகு... அப்பாவின் வகுப்பில் பிரம்பெடுத்து மாணவரை மிரட்டியது, அம்மை தடுப்பூசி குத்த வந்தவரைக் கண்டு, பயத்தில் பள்ளியால் பாய்ந்தோடி பக்கத்துக் காட்டில் ஒளிந்தது, கணிதத்துக்கு 99 புள்ளி பெற்றதற்காக வகுப்பாசிரியரான அப்பாவிடமே அடிவாங்கியது, அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த அப்பாவின் தாய் மாமனாரின் "நம் பிள்ளைக்கு அடித்துப் படிப்பிச்சால் ஊரார் பிள்ளைகள் தானாய் திருந்திப் படிக்குங்கள்" என்ற உபதேச மொழிகளைக் கேட்டதும்.. அதுபோல் அடி வாங்கியதுமென்று கசப்பான பள்ளி வாழ்க்கை அனுபவங்கள் சில அமைந்திருந்தாலும் , எலி ஓட்டப் போட்டியில் ஓடுவதற்கே பச்சை முட்டையுடன் குளுக்கோஸ் குடித்தது, நாடகப் போட்டியில் பரிசு வாங்கியது, ஆங்கில வாத்தியாருடன் சவால் விட்டது என சந்தோசமான அனுபவங்களும் இல்லாமலில்லை. அவை.. பின்னர்....

1 comment:

த.அகிலன் said...

இதை நீங்கள் தொடர்ச்சியாக நிச்சயம் எழுதவேண்டும். உங்களிடமிருந்து நிச்சயம் ஒரு குறித்த பொற்காலத்தின் நினைவுகள் அப்படியே எதிரொலிக்கும் என நம்புகிறேன் எனவே இதை தாமதமின்றி தொடருங்கள்