Tuesday, February 9, 2010

வானொலி நாடக நூல்கள் - சில மனப்பதிவுகள்

காற்றில் கலைபடைக்கும் கருவி வானொலி . அதன் படைப்புகள் அத்தனையுமே காற்றில் கரைந்துவிடுவதனாலோ என்னவோ அது படைத்தளிக்கும் கலை வடிவங்களுக்கு எவருமே கலைப்படைப்புகளுக்கான அந்தஸ்தினைத் தர மறக்கின்றனர் அல்லது மறுக்கின்றனர். வானொலியில் ஒலிபரப்பாகும் விடயதானங்கள் பெரும்பாலும் அச்சேறுவதில்லை அல்லது நூல்களாகக் தொகுக்கப்படுவதில்லை என்ற காரணத்தால் அவை எத்தனை சிறப்பான படைப்புகளாக இருந்தாலும் அவற்றுக்கு இலக்கிய அந்தஸ்துக் கிடைப்பதேயில்லை. அண்மைக்காலமாக இந்த நிலையில் சிறிது மாற்றமேற்பட்டாலும் பாரிய மாற்றமொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக வானொலி நாடகங்களின் நிலைமையோ மிகவும் கவலைக்கிடமாயுள்ளது.

அண்மையில் ஈழத்தின் பிரபல சிறுகதை, நாவல், நாடக ஆசிரியர் அமரர் இலங்கையர்கோனின் புதல்வர் ஜெயவர்மன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது தனது தந்தையாரால் எழுதப்பட்டு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான 'விதானையார் வீடு', 'லண்டன் கந்தையா', 'மிஸ்டர் குகதாசன்' போன்ற நாடகங்களினதும் ஏனைய சரித்திர, இலக்கிய நாடகங்களினதும் எந்த ஒரு பிரதியும் தமது குடும்பத்தினரிடமோ அல்லது வேறு எவரிடமுமோ இல்லை என்ற ஓர் அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் அனைவராலும் சிலாகித்துப் பேசப்பட்ட இந்த வானொலி நாடகப்பிரதிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது எவருக்குமே தெரியாத, புரியாத புதிராகவேயுள்ளது. குறிப்பாக வானொலி நாடகங்கள் நேரடியாக ஒலிபரப்பப்பட்ட காலகட்டத்தில் படைத்தளிக்கப்பட்ட இந்த நாடகப்பிரதிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொல்ல எவருமேயில்லை. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இதன் ஒலிப்பதிவுகளைத் தேடிப்பெறமுடியாது. ஏனெனில் அவை ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகவில்லை என்பது ஒரு விஷயம். அப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓரிரு நிகழ்ச்சிகள்கூட, அவை பதிவு செய்யப்பட்ட பாரிய இசைத்தட்டுக்கள் அழிவடைந்துவிட்டதால் பாவிக்கமுடியாத நிலையிலுள்ளன. தப்பிப்பிழைத்திருக்கும் சில இசைத்தட்டுக்களை இயக்குவதற்கான கருவிகளும் தற்போதில்லை.

இலங்கையர்கோனின் படைப்புகளுக்கு நேர்ந்த கதிதான் ஏனைய நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் நேர்ந்தன. வானொலி எழுத்தாளர்களும் தமது படைப்புகள் வானொலியில் ஒலிபரப்பாகும் 'திருநாளை' மட்டுமே கவனத்தில் கொண்டார்களேயன்றி, அவற்றின் இலக்கிய நோக்கம் குறித்தோ, அவற்றின் பின் தேவைகள் குறித்தோ அக்கறை கொள்ளவில்லை. தமது படைப்புகள் ஒலிபரப்பானதும் நேயர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்களில் கிறங்கிப்போய் அடுத்த படைப்புக்காகத் தம்மைத் தயார்ப்படுத்தியதில், காற்றில் கரைந்த நிகழ்ச்சிப் பிரதிபற்றி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அதனால், ஒலித்து ஓய்ந்த நாடகப் பிரதி ஒன்றைப் பெற்றுப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. இந்த எழுத்தாளர்கள் இவ்வாறு அன்று சிந்தித்திருந்தால் ஒரு காலகட்டத்தை, எமது சமூக வாழ்வியல் விழுமியங்களைப் பிரதிபலிக்கும், அரிய படைப்புகளை இன்று நாம் கைகளில் தக்கவைத்துக் கொண்டிருப்போம். அவ்வாறு தவறிப்போன முக்கியமான நாடகங்களில் சில்லையூர் செல்வராஜனின் மூலக்கதையைத் தழுவி, கே.எம். வாசகரால் எழுதித் தயாரிக்கப்பட்ட தணியாத தாகம் , மரிக்கார் ராமதாசால் எழுதப்பட்டு ஒலிபரப்பான 'கோமாளிகள் கும்மாளம்' போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்தப் போக்கிலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவராக வரணியூரான் என்ற புனை பெயரில் எழுதிய எஸ்.எஸ்.கணேசபிள்ளையை நான் காண்கிறேன். முதன்முறையாக வானொலித் தொடர் நாடகமொன்றை அதுவும் வர்த்தக நிகழ்ச்சிக்காக எழுதப்பட்ட வானொலி நாடகப் பிரதியான அசட்டு மாப்பிள்ளை'யை நூலாக்கியவர் அவர். 12 வார காலம் மில்க் வைற் சோப் நிறுவனத்தினரின் விளம்பர நிகழ்ச்சியாக வானொலியில் ஒலித்த அசட்டு மாப்பிள்ளை நாடகத்தை, மேடை நாடகமாகவும் நடிக்கக்கூடிய விதத்தில் 1975 நவம்பரில் நூலாக்கம் செய்தனர் கமலாலயம் பிரசுரத்தினர். அசட்டு மாப்பிள்ளை பின்னர் 80களிலும் மீண்டும் விளம்பரதாரர் நிகழ்சியாக வானொலியில் இடம்பெற்றபோது நான் அசட்டு மாப்பிள்ளை பாத்திரத்தில் நடித்தேன். பின்னர் வரணியூரான் தனது 'இரைதேடும் பறவைகள்' என்ற வானொலித் தொடர் நாடகத்தை, பாரிய நூலாக ஆக்கித் தந்தார். இந்த நாடகத்தை அவர் 1993ல் நூலாக்கஞ் செய்ததுடன் பல இடங்களிலும் வெளியீட்டு விழாக்களையும் ஏற்பாடு செய்திருந்தார்.

.

வரணியூரானை முன்மாதிரியாகக் கொண்டு தனது வானொலி நாடகங்களை நூலாக்க முன்வந்தார் அராலியூர் சுந்தரம்பிள்ளை. இவரால் எழுதப்பட்ட 15 நிமிட, 30 நிமிட நேர தனி நாடகங்கள் ஒன்பது, 'கெட்டிக்காரர்கள்' என்ற பெயரில் 1988 ல் வெளிவந்தன. இதனையடுத்து மேலும் 10 வானொலி நாடகங்களையும் ஓரங்க நாடகம் என்ற ஒரு கட்டுரையையும் கொண்ட 'முதலாம் பிள்ளை' என்ற நூல் 1990 லும் வெளிவந்தன. இந்த நாடக நூல்கள் நாடக எழுத்தாளர்கள் பலருக்கு உந்து சக்தியாக அமைந்தன என்றே நான் சொல்வேன். பின்னர் அவர் தனது வானொலி நாடகங்களை 1997ல் 'வீடு', என்ற நூலாகவும், 1998ல் 'யாழ்ப்பாணமா? கொழும்பா?' என்ற நூலாகவும், 2002ல் 'எங்கள் நாடு' என்ற நூலாகவும் வெளியிட்டதாக அறிகிறேன். இவற்றுள் முதல் இரு நூல்களை மட்டுமே நான் படிக்கக் கிடைத்தது. வானொலி நாடகங்களைப் பொறுத்தவரையில் அராலியூர் சுந்தரம்பிள்ளை ஒரு சாதனையாளர் என்றே கூறுவேன். 2002ம் ஆண்டின் ஆரம்பத்தில் அவரால் 330க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்குப் பின்னர் எத்தனை வானொலி நாடகங்களை அவர் எழுதினாரோ நானறியேன். அத்துடன் வானொலி நாடகங்களை 5 நூல்களாகவும் அவர் பிரசுரித்திருக்கிறார். அதுமட்டுமின்றி 25 மேடை நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்து, மேடையேற்றியுமுள்ளார். நானறிய, நாடகந்தொடர்பாக இவர் 10 நூல்களை மொத்தமாக வெளியிட்டுள்ளார். இந்த எண்ணிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது உலகில் எந்தவொரு மொழியிலேனும் இந்தளவு எண்ணிக்கைகளை எட்டிய வானொலி நாடக ஆசிரியர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்றே கேட்கத் தோன்றுகிறது.

பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராஜன் எழுதிய திரைப்படச் சுவடியான 'தணியாத தாகம்' பின்னர் மக்கள் வங்கியின் அனுசரணையுடன் அதே பெயரில் வானொலித் தொடர் நாடகமாக ஒலித்தது. கே.எம். வாசகர் எழுதி இயக்கிய இவ்வானொலி நாடகத்தின் பிரதிகள் சேகரிக்கப்பட்டு நூலாக்கம் பெற்றிருந்தால் சிறந்த ஒரு வானொலி நாடக நூலொன்று எமக்குக் கிடைத்திருக்கும். இந்நாடகம் பற்றி நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்த 'அண்ணை ரைட்' புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் இவ்வாறு நினைவு கூருகிறார்

."கே.எஸ்.பாலச்சந்திரன் (சோமு), விஜயாள் பீற்றர் (யோகம்), கமலினி செல்வராஜன் (கமலி), கே.மார்க்கண்டன் (மாமா), செல்வநாயகி தியாகராஜா (மாமி), வாசுதேவன் (குமார்), ஷாமினி ஜெயசிங்கம் (சோமுவின் காதலி), எஸ்.கே. தர்மலிங்கம் (அப்பா), யோகா தில்லைநாதன் (அம்மா), எஸ். ஜேசுரட்னம், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், எஸ்.எழில்வேந்தன் என்ற புதுக்குழு களமிறங்கியது. தொடர் நாடகம் ஆரம்பித்து சில வாரங்களில், எராளமான நேயர்கள் வானொலி நிலையத்திற்கும், மக்கள் வங்கி முகவரிக்குமாக பாராட்டுக்கடிதங்கள் எழுதத் தொடங்கினார்கள். சோமுவையும், தங்கைகள் யோகம், கமலி இருவரையும் தங்களின் உடன்பிறப்புகளாக நினைத்து, அவர்களின் துன்பங்களுக்காக கண்ணீர் விட்டு, சந்தோசங்களில் மகிழ்ச்சி அடைவதாக அந்தக்கடிதங்கள் வந்தன. நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் ஞாயிறு தோறும் நாலரை மணிக்கு வீடுகளில், தோட்டங்களில், வயல் வரப்புகளில், டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களோடு காத்திருக்கிறோம் என்றார்கள்.

ஞாயிறு 4.30க்கு " அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே..கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே" என்று ஆரம்பப்பாடல் ஒலிக்க, யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த .போ. பஸ் ஒன்றிலிருந்த பிரயாணிகளின் ஏகோபித்த வேண்டுகோளுக்க இணங்க, திருநெல்வேலி தேனீர் கடைக்கு முன்னால் பஸ் நிறுத்தப்பட்டு , தணியாத தாகம் கேட்கப்பட்டதாக யாரோ சொல்லக்கேட்டு ஆனந்தமடைந்தோம். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு அபிமான நேயர், "சோமு"வின் குடும்பக்கஷ்டத்தை பொறுக்கமுடியாமல் 100ரூபாவுக்கான காசோலையை அனுப்பியிருந்தார். தெல்லிப்பளையிலிருந்து மூன்று சகோதரிகள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை நீண்ட கடிதங்களில் எழுதி அனுப்பினார்கள். நாடகத்தை வானொலிக்கு ஏற்றவகையில் மாற்றி எழுதி வழங்கிய கே.எம்.வாசகர் , முடிவிலே இந்த சகோதரிகளின் விருப்பபடி சிறு மாற்றம் ஒன்றைச் செய்யும் அளவிற்கு அவர்களது பங்களிப்பு இருந்தது. இத்தொடர்நாடகத்தின் இறுதிக்காட்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டபொழுது, யோகத்தின் மரண ஊர்வலக் காட்சியில் நாங்கள் எல்லோரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தடுமாறினோம். நீண்ட நாட்களாக அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடமுடியாமல் தவித்தோம். இப்படி ஒரு வானொலி நாடகம் நிறைவெய்தியது. "

ஏற்கனவே நூலான திரைப்பிரதியொன்று வானொலி நாடகமான வரலாறு இது. இதே நூலைத் தந்த சில்லையூர் செல்வராஜன் அவர்கள் ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ - ஜூலியட்'டைத் தமிழில் கவிதை நாடகமாக்கித் தந்திருந்தார். ஒலிபரப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீதின் தயாரிப்பில் ஒலித்த இந்த ஒருமணி நேர வானொலி நாடகம் பின்னர் நூலுருப்பெற்றது. 'ரோமியோ ஜூலியட்' கவிதை நாடகத்தை ஒருபுறத்திலிருந்து படித்து முடித்து விட்டு நூலைத் தலைகீழாகப் பிடித்து மறுபுறத்தின் ஆரம்பத்திலிருந்து சில்லையூரார் ஷேக்ஸ்பியரைப்பற்றி எழுதிய "ஷேக்ஸ்பியர் ஒரு ஜீவ நதி" எனும் நீண்ட ஆய்வுக்கட்டுரையைப் படிக்கக் கூடியவகையில் புதிய உத்தியைப் பயன்படுத்தி இந்நூல் அச்சிடப்பட்டிருந்தது.

வவுனியாவிலிருந்து எழுத்தூழியம்செய்யும் தமிழ்மணி கவிஞர் அகளங்கன் (நா.தர்மராசா) அமரர் ஜோர்ஜ் சந்திரசேகரன் வானொலி நாடகத் தயாரிப்பாளராக இருந்த வேளையில் நல்ல பல சமூக நாடகங்களை எழுதிவந்தார். இவ்வாறு எழுதப்பட்ட ஐந்து நாடகங்களைத் தொகுத்து 1992ல் 'அன்றில் பறவைகள்' என்ற பெயரில் நூலாக்கினார். அகளங்கனின் இந்த நூலுக்கு தேசிய சாகித்திய மண்டல விருது கிடைத்தது. தேசிய சாகித்ய மண்டல விருது பெற்ற ஒரேயொரு வானொலி நாடக நூல் இதுவென்பது குறித்துரைக்கப்படவேண்டியதே. கவிஞர் அகளங்கன், நான் வானொலி நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் சிறந்த இலக்கிய நாடகங்கள் பலவற்றை எழுதினார். அவ்வாறு ஒலிபரப்பான இலக்கிய நாடகங்கள் ஆறைத் தேர்ந்தெடுத்து 1994ல் வெளியிட்ட 'இலக்கிய நாடகங்கள்' நூலுக்கு வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய நூல் விருது கிடைத்தது. அத்துடன் ஓய்ந்து போகாத அகளங்கன், ' கூவாத குயில்கள்' என்ற மற்றொரு வானொலி நாடக நூலை 2002ல் வெளியிட்டார்.

இலங்கை வானொலியின் முஸ்லீம் சேவையில் மர்ஹூம் எம்.எச்.குத்தூசுக்குப்பின்னர் வானொலி நாடகத் தயாரிப்பாளராகக் கடமையாற்றியவர் எம்.அஷ்ரப் கான் அவர்கள். 1958லிருந்து வவனொலி நாடகங்களை எழுதிவரும் அஷ்ரப் கான் தனது 10 வானொலி நாடகங்களைத் தொகுத்து முள் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.1999ல் வெளியான முள்ளில் காணப்படும் வானொலி நாடகங்கள், இலங்கை வானொலியின் முஸ்லீம் சேவையிலும் தமிழ்ச் சேவையிலும் ஒலிபரப்பான நாடகப் பிரதிகளின் தொகுப்பாகும். நூற்றுக்கணக்கான நாடகங்களை எழுதித் தயாரித்த அஷ்ரப் கான் வெரும் 10 நாடகங்களை மட்டுமே நூலாக்கியுள்ளமை ஏமாற்றமே.

1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான முதல் 8 ஆண்டுகள் சிறுவர் மலரின் வானொலி மாமாவாகச் செயற்பட்ட நான், இலங்கை வானொலியிலிருந்து விலகிச்செல்ல, டிசம்பர் மாதம் முதலாந் திகதியிலிருந்து வி.என்.எஸ். உதயசந்திரன் வானொலி மாமாவாகச் செயற்படத்தொடங்கினார். 5 ஆண்டுகள் சிறுவர் மலரில் ஒலித்த தனது சிறுவர் நாடகங்கள் சிலவற்றை 2000ஆம் ஆண்டில் அவர் நூலுருவாக்கினார். தமிழில் முதன்முதலில் வெளி வந்த வானொலிச் சிறுவர் நாடகநூல் இதுவாகும். இவர் வானொலி நாடக நடிகராகவும் இருந்ததால் வானொலி நாடகங்கள் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதை அனுபவரீதியாக அறிந்தவர். இன்றைய வானொலி நிகழ்ச்சிகளில் மிக நீண்ட வரலாறு கொண்ட நிகழ்ச்சி சிறுவர் மலராகும். சிறுவர் மலரில் அவ்வப்போது எத்தனையோ அம்சங்கள் மாறிமாறி வந்திருக்கின்றன. ஆனால் மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருவது குட்டி நாடகங்களே. சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் என்ற தலைப்பிலான இந்நாடக நூல் 2000 ஆம் ஆண்டுக்கான வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் சிறுவர் இலக்கியத் துறைக்கான பரிசு பெற்றது. வி.என்.எஸ். உதயசந்திரனின் சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள், மீண்டும் 2002லும், 2006லும் மீள் பதிப்பாக வெளிவந்து சாதனை படைத்தது. வானொலி நாடக நூலொன்று இரண்டு தடவைகள் மறுபதிப்புக் கண்டமை என்பது இந்நூலிற்குக் கிடைத்த சாதனை வெற்றியாகும்.


உதயசந்திரனின் சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் தந்த உந்து சக்தியின் காரணமாகவோ தெரியவில்லை, 'மறை முதல்வன்' என்ற புனைபெயரில் வானொலி நாடகங்களை எழுதிவரும் ஜீ. பீ. வேதநாயகமும் தான் சிறுவர் மலருக்காக எழுதிய பதினேழு குட்டி நாடகங்களைத் தொகுத்து நாளைய நாயகன் சிறுவர் (மலர்) நாடகங்கள் என்ற நூலை வெளியிட்டார். மறைமுதல்வனும் ஓர் ஒலிபரப்பாளர்;வானொலி நாடக நடிகர்; எழுத்தாளர். அத்துடன் தொழில் ரீதியாக ஆசிரியத் தொழில் புரிந்தவர். சிறுவர் உளவியல் அறிந்தவர். 2001ல் வெளியிடப்பட்ட அவரது நாளைய நாயகன் சிறுவர் (மலர்) நாடகங்கள் நூல் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டன. 'மறை முதல்வன்' ஜீ. பீ. வேதநாயகம் தனது வானொலி நகைச்சுவை நாடகங்கள் பதினொன்றை தேர்ந்தெடுத்து கழுதைக்கும் காலம் வரும் என்ற தலைப்பில் 2005ல் மணிமேகலைப் பிரசுரமாக வெளியிட்டார். தமிழகத்தின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான (அப்புசாமி-சீதாப்பாட்டி புகழ்) பாக்கியம் கந்தசாமியின் முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.

வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்த அருணா செல்லத்துரை அவ்வப்போது வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகப் பிரதிகளை எழுதி வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிக்காக எழுதிய வீடு நாடப் பிரதியையும் வேறு சில வானொலி நாடகப் பிரதிகளையும் சேர்த்து வீடு தொலைக்காட்சி நாடகமும் வானொலி நாடகங்களும் என்ற நூலை 1993ல் வெளியிட்டார், இந்நூலுக்கு 1994ல் யாழ் இலக்கியப் பேரவையின் சிறந்த நாடக நூலுக்கான இலக்கியச் சான்றிதழ் விருது கிடைத்தது. அத்துடன் வன்னிப் பாரம்பரிய வரலாற்றையொட்டி அவர் படைத்த நந்தி உடையார் வானொலி நாடகப்பிரதி 1996ல் நூலாக்கம் பெற்றது. 1996ம் ஆண்டு சாகித்ய மண்டலப் பரிசும்,வானொலி நாடகத்திற்கான உண்டா அபிநந்தன தங்க விருதும் இதற்குக் கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கவை.

வெறும் களிப்பூட்டலை மட்டுமே மையமாகக் கொண்டு ஒலிபரப்பான வானொலி நாடகங்கள், முகத்தார் வீட்டில் என்ற விவசாய நாடக ஒலிபரப்புடன் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது. எஸ்.யேசுரத்தினத்தின் எழுத்தாக்கத்திலும், விவசாயத் திணைக்களத்தின் பண்ணை ஒலிபரப்புச் சேவையின் நிதி அனுசரணையோடும் ஒலித்த இந்த விவசாய நாடகம், நகைச்சுவையோடு விவசாயத் தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் ஒலிபரப்பப்பட்டது. 5 ஆண்டுகாலத்திற்கும் மேலாக, சரியாகச் சொல்வதானால் 268 வாரங்கள் தொடர்ச்சியாக ஒலித்த இந்நாடகத்தின், ஆசிரியர் எஸ். யேசுரத்தினம், 1993ல் புலம்பெயர்ந்து ஃப்ரான்ஸ் நாட்டில் வசிக்கிறார். ஃபிரான்ஸில் இருந்து கொண்டே யேசுரத்தினம் அவர்கள், முகத்தார் வீட்டில் வானொலி நாடகப் பிரதிகள் ஐந்து, மேடை நாடகங்கள் மூன்று, வேறு வானொலிநாடகப் பிரதிகள் நான்கு என மொத்தம் 12 நாடகங்களை முகத்தார் வீட்டுப் பொங்கல் என்ற பெயரில் மணிமேகலைப் பிரசுரமாக வெளியிட்டுள்ளார். 1999ல் இந்நூல் வெளியிடப்பட்டது.

எனது தந்தையார் கவிஞர் நீலாவணன் எழுதி 1962 ல் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய இலங்கையர்கோன் நினைவுக் கலை விழாவில் மேடையேற்றம் பெற்ற கவிதை நாடகம் மழைக்கை. பின்னர் இக்கவிதை நாடகம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பானது. இந்த நாடகத்துடன், 1961 மே மாதத்தில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகவிருந்து, அப்போது அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலைகாரணமாக ரத்துச் செய்யப்பட்ட கற்பனைக் கண் (மனக்கண்) கவிதை நாடகத்தையும் சிலம்பு, துணை ஆகிய வேறு இரு கவிதை நாடகங்களையும் சேர்த்து 2005ல் நீலாவணன் கவிதை நாடகங்கள் என்ற நூலாக வெளியிட்டேன். இந்நூலுக்கு 2005ஆம் ஆண்டின் நாடக நூலுக்கான தேசிய சாகித்ய மண்டல விருதும், வடகிழக்கு மாகாண இலக்கிய விருதும் கிடைத்தன. இந்த நூல் வெளிவந்ததன்பின் அதிலுள்ள மழைக்கை, மனக்கண் ஆகிய இரு கவிதை நாடகங்களையும் 2007ல் இலங்கை சூரியன் எஃப்.எம். வானொலி ஒலிபரப்பியது.

1 comment:

Seelan said...

இந்தியாவுக்கு ஒரு இராஜராஜ சோழன் போல் கிழக்கு மண்ணின் முடிசூடா மன்னனாக இருந்து நீங்கள் செய்யும் சேவைக்கு பாராட்டுகள். எனது வலைப்பூவுக்கும் உங்களை தரிசிக்க அழைக்கிறேன்.http://vellisaram.blogspot.com/