Tuesday, February 9, 2010

ஆடி அமாவாசை

இரண்டு நாட்களுக்கு முன் அவன் அந்த வானொலிச் செய்தியைத் தற்செயலாகத்தான் கேட்க நேரிட்டது. நாட்டில் ஐந்தாறு தமிழ் வானொலிகள் இருந்தாலும், இப்போதெல்லாம் அவன் வானொலி பெரிதாகக் கேட்பதேயில்லை. இத்தனைக்கும் அவனுக்கு வானொலி ஒன்றும் எதிரியோ அல்லது தீண்டத்தகாத சாதனமோ அல்ல. சொல்லப் போனால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவன் வீட்டில் அடுப்பெரிந்தது இந்த வானொலியில் அவன் பெற்ற சம்பளத்தினால்தான். ஆனால் தற்போது வானொலி எடுத்திருக்கும் புதிய கோலத்தைச் சகிக்கமுடியாமல், வானொலிப் பணியிலிருந்து விலகி, சாயங்களும் இரசாயனங்களும் விற்கும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து அவன் வானொலியைப் பெரிதாகக் கேட்பதில்லை. இருந்திருந்துவிட்டுக் கேட்க நேரிட்டாலும் அதில் வரும் தவறுகளைக் கேட்டு, புலம்ப வேண்டியதாகிவிட்டது. அதனால் அவன் வானொலி கேட்பதைத் தவிர்த்தான். தொலைக்காட்சியும் அவ்வாறுதான். கடைசியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை எப்போது ஆறுதலாயமர்ந்து பார்த்தோம் என்பதே அவனுக்கு நினைவிலில்லை. சரி அதை விடுவோம். தற்செயலாக கேட்ட அந்தச் செய்தி அவனை நன்றாகவே குழப்பி விட்டிருந்தது.

“நாளை மறுநாள், ஆடி அமாவாசைத் தினத்திலன்று, இந்துக்கள், சமயச் சடங்குகளை நிறைவேற்ற, கொழும்பு முகத்துவாரம் கடலோரப் பகுதிக்குச் செல்ல முடியாதென கடற்படையால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை, கொழும்பு உயர் நீதிமன்றம் ரத்துச் செய்தது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த நீதிபதிகள், கடற்படையினரின் அனுமதியோடு இந்தச் சடங்குகளை நிறைவேற்றிக் கொள்ளலாமெனத் தீர்ப்புவழங்கினர்”. இத்தனை தெளிவாக, எவ்வித தமிழ்க் கொலைகளும் பிழைகளுமின்றி அந்தச் செய்தி வாசிக்கப்படாவிட்டாலும்கூட, இந்தளவாவது அவனால் விளங்கிக் கொள்ளும் வகையில் அந்தச் செய்தி ஒலிபரப்பானபோதுதான் நாளை மறுநாள் ஆடி அமாவாசை என்பது அவனுக்குத் தெரிய வந்தது.

அவனது அப்பா சடுதியாகக் காலமானபின் அடுத்தடுத்து வந்த இரண்டு ஆடி அமாவாசைக்கும் மட்டக்களப்பு மாமாங்கக் கோவிலுக்குப் போய் பிதிர்கடன் கொடுத்து, எள்ளும் தண்ணீரும் இறைத்து, தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடியது நன்றாகவே நினைவில் இருக்கிறது. தொழில் காரணமாக அவன் கொழும்பு வாசியான பின்னர், ஊர் நிலவரமும் மோசமாக, அதெல்லாம் முடியாத காரியமாகப் போய்விட்டது. பிறகு ஒவ்வொரு ஆண்டும், அப்பா, தான் இறந்த திதிக்கு சரியாக ஒருமாதம் முன்னரே அவன் அம்மாவின் கனவில் வந்து “பசிக்குது” என்று சொல்லிச் சாப்பாடு கேட்பதும், அம்மா உடனே தொலைபேசி அழைப்பெடுத்து, அவனிடம்அப்பாவின் திதி வருகுது. மறக்காமல் செய்து போடு மகன்” என்று ஞாபகப்படுத்துவதும், அவன் ஐயரை அழைத்து அல்லது கோவிலுக்குப் போய் பிதிர் கடன் கழிப்பதுமாக கொஞ்ச வருஷங்கள் கடந்தன.

அப்பா கனவில் வருவதும் திடீரென நின்றுபோக, “அப்பா எங்கையோ திரும்பவும் பிறந்திட்டார்போல. அதுதான் இப்ப கனவிலையும் வாறதில்லை” என்ற அம்மாவின் ஊகத்துக்குப் பின், திதியும் மறந்து போனது. இப்படித்தான் இருந்திருந்துவிட்டு ஆடி அமாவாசைக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன் அவனது அம்மா உட்பட யாரிடமிருந்தாவது தெரிய வரும்போது அவன் குடியிருந்த இடத்துக்குப் பக்கமாகவே இருக்கின்ற முகத்துவாரம் போய் கரையோரம் அமர்ந்திருக்கிற ஐயர்மாரில் ஒருவரைப் பிடித்து கூட்டத்தோடு கூட்டமாய் பிதிர் கடன் கழிப்பதும், விரதமிருப்பதும், பகல் பிச்சைக்காரருக்குச் சாப்பாடு கொடுப்பதுமாகச் சில வருஷங்கள் கழிந்ததுமுண்டு. இது முடியாத போது காலை முதல் பகல் வரை சாப்பிடாமலிருந்து பிச்சைக்காரருக்குச் சாப்பாட்டுப் பார்சல் கொடுப்பதோடு முடித்துவிட்டதுமுண்டு.

ஆனால் அன்றைக்கு செய்தி கேட்டதுமுதல் அவன் கொஞ்சம் குழம்பிப்போயிருந்தான். ஒன்று, அவன் கடந்த சில வருஷங்களாக ஆடி அமாவாசைக்கு முகத்துவாரம் போய், பிதிர்கடன் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு. மற்றையது யார் யாரோ மீன்பிடிக்க, காதலிக்க, கஞ்சா விற்க, ஏன் அழகிகளைக் கற்பழித்துக் கொலை செய்யவெல்லாம் தடைகளெதுவுமின்றி அனுமதிக்கப்படும் முகத்துவாரத்தில், தனது சமயச் சடங்கை நிறைவேற்ற யார் யாரிடமோ அனுமதி கேட்டுத்தான் போக வேண்டுமா என்ற ஆதங்கம்.

“கூட்டங்கூட்டமாய்ப் போய் எங்கடை உரிமையை நிலை நாட்டவேணும்” என்று அவன் உள்ளுணர்வு சொன்னாலும், யாரோ அன்னியனிடம் அனுமதி பெற்று அவன் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருக்க தன் அப்பாவுக்கான சடங்கை நிறைவேற்ற வேண்டுமா என்ற கேள்வியும் அவனுள் எழாமலில்லை. அதற்கிடையில் வேறு யாரேனும் நீதி மன்றம் போய் மீண்டும் ஒரு தடை உத்தரவு வாங்கிக் கொண்டால்..? என்ற சந்தேகமும் எழுந்து கொண்டது. ஆடி அமாவாசை நாள் அலுவலக நாள் என்பது மற்றொரு பிரச்சனை. “தனிப்பட்ட காரணங்களுக்காக விடுமுறை எடுப்பதெனில் விடுமுறை தினத்திற்குக் குறைந்தது 3 தினங்களுக்கு முன்னராவது அனுமதி பெற்றிருக்க வேண்டும்” என்று நேற்றுத்தான் அவன் நிறுவனத் தலைவர் மின்னஞ்சலில் அலுவலக சுற்றுநிருபம் அனுப்பியிருந்தார்.

யோசித்து யோசித்துக் குழம்பிப் போய் கடைசியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். மதியம்வரை விரதம். அதன் பின்னர் இரண்டு மூன்று சாப்பாட்டுப் பார்சல்கள் வாங்கி பிச்சைக்காரருக்குக் கொடுப்பது.

எடுத்த முடிவின்படி காலையிலிருந்து அவன் ஒன்றுமே சாப்பிடவில்லை. “ டயபட்டிஸ்’காரர் இப்பிடி விரதம் பிடிப்பதெல்லாம் கூடாது என்று, மருந்துப் பொருள்களை மொத்த விற்பனை செய்யும் நிறுவனமொன்றில் முன்னர் பணியாற்றி, இப்போது அவனுடன் வேலை செய்யும் நண்பர், தன் மருத்துவ அறிவைப் பகிர்ந்துகொண்டாலும், அப்பாவுக்காக ஒரு நாள் இருவேளை பட்டினியிருந்தால் ஒன்றும் நடக்காது என்று நினைத்துக்கொண்டான். இருந்தும் பகல் பன்னிரண்டு மணியாகுமுன்னரே பசி வயிற்றைக் கொஞ்சம் கிள்ளியதுதான்.

மதியச்சாப்பாட்டு நேரம். அலுவலகத்தை விட்டு காலி வீதிக்கு வந்தான். அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே காலி வீதி ஓரமாக, நிழற்குடையின்கீழ் வித விதமான சாப்பாட்டுப் பார்சல்கள் விற்கும் இரண்டு இடங்கள் இருக்கின்றன. அதில் பரபரப்பாக விற்பனை நடைபெறும் ஒரு நிழற்குடையைத் தேர்ந்தெடுத்து அருகில் போனபோதுதான், “தானமாகக் கொடுக்கும் சாப்பாடு சைவச்சாப்பாடாக இருக்க வேண்டுமா?” என்ற சந்தேகம் எழுந்தது. “சைவமெண்டால் சிலவேளை சந்தோசமாகச் சாப்பிடமாட்டாங்கள். குடுத்தும் பிரயோசனமில்லாமல் போயிடும்” என்று அவன் உள் மனம் சொன்னது. இருந்த பார்சல்களில் ‘ஸ்பெஷல்’ வகையைத்தெரிவு செய்து மூன்று பார்சல்கள் வாங்கிக் கொண்டான்.

வழக்கமாக கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில் பிச்சைக்காரர்கள் கூடியிருக்கும் இடங்கள் அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனது அலுவலகத்துப் பக்கத்திலே அசைவங்களும் விற்கும் - ஒரு சைவக்கடை உள்ளது. அதற்குப் பக்கத்திலேயே சர்வதேச உரிமத்துடன் வெள்ளைக்கார கோமாளிப் பொம்மையை வாசலில் வைத்து, ‘பேர்கர்’ விற்கும் நிலையம். இரண்டையும் ‘கவர்’ பண்ணி இடையில் சில பிச்சைக்காரர்கள் நிற்பார்கள். இல்லையென்றால் கொள்ளுப்பிட்டிச் சந்திப்பக்கம் சற்று நடந்தால் ‘கேக்’ உட்பட ‘பேக்கரி’ப் பண்டங்கள் விற்கும் இரண்டு பிரபல நிறுவனங்கள் கொஞ்சம் எதிரெதிராக உள்ளன. இவற்றுக்கு இடையே இரண்டு கடைகளையும் ‘கவர்’ பண்ணி, சிலர் இரண்டு மூன்று நாய்கள் சகிதம் இருப்பார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். அவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இந்த 3 பார்சல் காணாதுதான் என்று உள்ளூர நினைத்துக் கொண்டு எட்டி நடந்தான். பசி வேறு வயிற்றில் சில சப்தங்களை எழுப்பத் துவங்கியிருந்தது.

ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக சர்வதேச “பேர்கர்” கடைக்குப் பக்கத்தில் ஒருவரையும் காணவில்லை. இனித்தானே மதியபோசன நேரம். வருவார்கள். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாமென ஒரு ஐந்து நிமிஷம் காத்திருந்தான். ஒருவரும் வருவதாகத் தெரியவில்லை. சரி . அடுத்த இடத்துக்குப் போகலாமென “கேக்” கடைப் பக்கம் நடந்தான். அங்கும் ஒருவருமில்லை. கூட நிற்கும் நாய்களையும் கூட்டிக்கொண்டு எங்கோ போய்விட்டிருந்தார்கள். புதுப் புதுச் ‘சிந்தனைகள்’ நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதால், நாடு வளம் பெற்று, எல்லாரும் எல்லாமுமே பெற்றுவிட்டார்களோ என எண்ணியவாறே கொள்ளுப்பிட்டிச் சந்திப் பக்கமாக நடக்கத் தொடங்கினான். இடையில் ஒரு மதுபானச் சாலை இருக்கிறது. அதற்குப்பக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசிப் பிச்சையெடுக்கும் ஒரு பிச்சைக்கார(ர்)ன் இருக்கிறா(ர்)ன். அவனோடு சேர்த்து அண்மையில் ஒரு வெள்ளைக்காரியையும் கண்டிருக்கிறான். அவர்களுடன் மேலும் இரண்டு மூன்றுபேர் அந்த இடத்தில் இருப்பார்கள்; பிடிக்கலாம் என்பதே அவன் சிந்தனை. ஆனால் என்ன செய்வது? ஹும்.. அங்கும் ஏமாற்றமே.

இப்போது என்ன செய்வதென்று புரியாமல் அவன் அடுத்த இடத்தைக் குறிவைத்தான். அடுத்து கொள்ளுப்பிட்டிச் சந்தியில் உள்ள ‘சுப்பர் மார்க்கெட்’ முன்னால் இல்லையென்றால் ‘லிபேட்டி பிளாசா’ முன்னால் நிற்பார்கள். இந்த இடங்களுக்குப் போவதென்றால் ஏறத் தாழ ஒரு கிலோமீற்றராவது இன்னும் நடக்கவேண்டும். மத்தியான வெயில் ஒருபுறம். காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாததால் பசிக்களை ஒருபுறம். அது மட்டுமில்லாமல்,வலது முழங்கால் மூட்டில் கடந்தசில நாட்களாக தோன்றியிருக்கும் வலி வேறு. என்ன செய்யலாமென யோசித்தவனுக்கு அவனது அலுவலகம் ஞாபகம் வந்தது. பிச்சைக்காரர்களுக்குத்தான் சாப்பாடு கொடுக்கவேண்டுமா? பசித்தவர் யாராயிருந்தாலும் கொடுக்கலாமே என்று நினைத்துக்கொண்டான். அலுவலகத்தில் சுத்திகரிப்புப் பணிசெய்யும் பெண்ணொருத்தியும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் இருக்கிறார்கள். அவன் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுவரும் நாட்களில், அதைச் சாப்பிடமுடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் கைகொடுப்பவர்கள் இவ்விருவருமே.

அலுவலகம் நோக்கித் திரும்பி நடந்துவரும்போதுதான், வயதான ஒரு பெண்மணி கையில் ஒரு ‘பைல்’ உடன் காலி வீதியில் வீடியோக் கடையொன்றின் படிக்கட்டுகளால் இறங்கிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அந்த நிறுவன ஊழியர் ஏதோ கூறிப் பேசியபடியே அந்தப் பெண்மணியை விரட்டிக் கொண்டிருந்தார். அப்பாவியான அந்தப்பெண்மனி அழாக் குறையாக அவன் முகத்தைப் பார்த்தாள். “ என்ன?ஏன் பேசுறாங்க?” என்று சிங்களத்தில் கேட்டான் அவன்.

“ மகளுக்கு ஒப்பரேஷன் ஐயா. அதுக்குக் காசு அறவிடுகிறன். பேசி விரட்டுறாங்க”

“பகல் சாப்பிட்டாச்சா?”

“இன்னுமில்லை”

“சாப்பாட்டுப் பார்சல் ஒண்டு தரட்டா?”

“ஐயோ. தாங்கோ. பெரிய புண்ணியம் கிடைக்கும்.”

தன் அப்பாவையே கண்ட சந்தோசத்துடன் ஒரு பார்சலை எடுத்துக் கொடுத்தான் அவன்.

“ஒரு பார்சல் போதுமா. இன்னுமொண்டு தரட்டா”

“ஒண்டு போதும் ஐயா. இப்ப இதை நான் சாப்பிடுவன். நான் அத்துறுகிரிய போக பின்னேரமாயிடும். போற நேரத்துக்குச் சாப்பாடு பழுதாப்போயிடும். நீங்க வேறை யாருக்கும் குடுங்கோ. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கட்டும்” கூறிவிட்டு நடந்தாள் அவள்.

“அலுவலகத்தில் இரண்டு பேர் இருக்கிறாங்கள்தானே?. அவங்களுக்குக் குடுத்தால் கணக்குச் சரி” என நினைத்துக் கொண்டவன் எட்டி நடந்தான். அலுவலகத்துக்குள் நுழையும்போதே, வாழை இலையில் கட்டிய பெரிய சாப்பாட்டுப் பார்சலைத் திறந்து வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு ஊழியர், சாப்பிட்ட கையைப் முதுகுக்குப் பின்னால் மறைத்தபடி எழுந்து நின்றார். இனி அவரிடம் கேட்டுப் பிரயோசனமில்லை என்று நினைத்தவன்;

“இருந்து சாப்பிடும். குசுமா எங்கே?” என்றான் சிங்களத்தில்.

“அவ உள்ளுக்கிருந்து சாப்பிடுறா மாத்தயா. கூப்பிடட்டா?

“சாப்பிடுறாவோ. ச்சா. பறவாயில்ல. சாப்பிடட்டும்”

இப்போது யாருக்குப் பார்சலைக் கொடுப்பது.மீண்டும் கொள்ளுப்பிட்டிச் சந்திதான் ஒரே இலக்கு. தனது கார்க்கதவைத் திறந்து மிஞ்சிய இரண்டு பார்சல்களையும் முன் சீட்டில் வைத்துக்கொண்டு காரை கொள்ளுப்பிட்டிச் சந்தியை நோக்கிச் செலுத்தினான் அவன். போகும்போது இரண்டு பக்கமும் பிச்சைக்காரர்களைத் தேடி அவன் கண்கள் அலைந்தன. ம்ஹும்.. கொள்ளுப்பிட்டிச் சந்தி, லிபேட்டி பிளாசா வாசல், ஒருவரும் சிக்கவில்லை. மீண்டும் காரைத் திருப்பி டுப்ளிகேஷன் வீதியால் பம்பலப்பிட்டி நோக்கிச் செலுத்தினான். தூரத்தே செம்மஞ்சள் ‘டீ ஷேட்’ போட்ட நகரசபை சுத்திகரிப்பாளர் குப்பை வண்டியைத்தள்ளியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டான். காரை நிறுத்தி,

“சாப்பாட்டு பார்சலொண்டு தந்தால் சாப்பிடுவியளா” என்று தயக்கத்துடனே கேட்டான். “பறவாயில்ல. தாங்கோ”

இரண்டாவது பார்சலையும் வெற்றிகரமாகக் கொடுத்துவிட்டு மீண்டும் பம்பலப்பிட்டி சந்தியை நோக்கி காரைச் செலுத்தினான். வழக்கமாக பம்பலப்பிட்டி சந்தியில் பள்ளிவாசலுக்கு அருகிலும் சிலர் இருப்பார்கள். அன்றைக்கென்று அவர்களையும் காணவில்லை. எஞ்சிய சாப்பாட்டுப் பார்சலை என்ன செய்வது என்று தெரியாமலே மீண்டும் காரை காலி வீதியூடாக அலுவலகத்தை நோக்கிச் செலுத்தினான் அவன். அலுவலகம் வந்து காரை நிற்பாட்டும்போது பாதுகாப்பு ஊழியர் ஓடிவந்தார்.

“என்ன மாத்தயா. சாப்பாட்டுப் பார்சலும் கையுமாக அலைகிறீர்கள்” என்றான்.

“இல்லை. 3 பார்சல் வாங்கினன். பசித்தவங்களுக்குக் கொடுக்க. ஒருவரையும் காணேல்ல. ரோட்டிலை இப்ப பிச்சைக்காரருக்கும் பஞ்சமாய் போயிட்டுது” என்றான்.

மாத்தயாவுக்குத் தெரியாதுபோல. ‘சார்க்’ மாநாட்டுக்காக கொழும்பு ரோட்டிலையிருந்த பிச்சைக்காரர் எல்லாரையும் பிடிச்சுக்கொண்டுபோய் முகாமிலையெல்லோ போட்டிருக்கிறாங்கள். நாய்களையும் முனிசிப்பல்காரர் பிடிச்சிட்டுப் போயிட்டாங்கள். இந்தா எங்கடை சிங்களப் பேப்பரிலை போட்டிருக்குது. இப்ப தானம் குடுக்கவும் பிச்சைக்காரர் ரோட்டிலை இல்லை ” என்றான் சிரித்தபடியே.

அவனுக்கு அப்போதுதான் எல்லாம் விளங்கியது. எஞ்சிய சோற்றுப் பார்சலோடு அலுவலகத்தில் சாப்பிடுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குப் போனான். காலையிலிருந்து ஒன்றுமேயில்லாத வயிறு. நன்றாகவே பசித்தது. அலைந்த களைப்பு வேறு. அப்பாவை மனதில் நினைத்தபடி சர சரவென பார்சலைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்கினான் அவன்.

No comments: